Search This Blog

Saturday, 31 August 2013

நடப்பு ஆண்டு கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு 10 கோடி ஹெக்டேராக அதிகரிப்பு

நடப்பு ஆண்டு கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு 10 கோடி ஹெக்டேராக அதிகரிப்பு

புதுடில்லி:நடப்பாண்டு கரீப் பருவத்தில், பல்வேறு தானியங்களின் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. அதேசமயம், பருத்தி, கரும்பு மற்றும் சணல் ஆகியவற்றின் பயிர் பரப்பளவு குறைந்துள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தொழில்துறையில் கடும் சுணக்க நிலை காணப்படுகிறது. பல்வேறு காரணங்களால், பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.ரூபாய் மதிப்பு:நிதி, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ஏற்றுமதி குறைந்து போனது மற்றும் செலாவணி வரத்தில் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இது போன்ற பல்வேறு பாதகமான சுழ்நிலை நிலவி வரும் நிலையில், நடப்பாண்டு, நாட்டின் வேளாண் உற்பத்தி, சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நாட்டுக்கு ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், அது நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வழிவகுக்கும் என, பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடப்பு வார இறுதி நிலவரப்படி, உள்நாட்டில், கரீப் பருவத்தில் ஒட்டு மொத்த சாகுபடி பரப்பளவு, 10 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 9.40 கோடி ஹெக்டேராக இருந்தது.எண்ணெய் வித்துக்கள்:கணக்கீட்டு காலத்தில், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, 21 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, 167 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 188 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில், ஜூன் மாதம் முதல், தென்மேற்கு பருவ மழை சிறப்பான அளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக, சோயா, நிலக்கடலை, சுரியகாந்தி, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது.
நடப்பு வார இறுதி நிலவரப்படி, நெல் சாகுபடி பரப்பளவு, 345 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 355 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதற்கு, மழை மட்டுமின்றி, மத்திய அரசு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை, 1,310 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும், வெளி சந்தைகளிலும், நெல்லுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதுவும், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பருத்தி சாகுபடி:பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவு, 88.31 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 101.81 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி கண்டுள்ளது. இதர தானியங்கள் சாகுபடி பரப்பளவும், 168.13 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 190.55 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.அதேசமயம், பருத்தி சாகுபடி பரப்பளவு, கணக்கீட்டு காலத்தில், 112.83 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 111.65 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, பல்வேறு மாநிலங்களில், பருவ மழை குறைந்து, வறட்சி காணப்பட்டதால், முந்தைய 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட பருத்தி சாகுபடி பரப்பில், 5 லட்சம் ஹெக்டேர் குறைந்திருந்தது.
நடப்பாண்டில், பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால், மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழகம் ஆகிய மாநில விவசாயிகள், பருத்தி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக, "சங்கர்-6' வகை பருத்திக்கு, உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிக கிராக்கி உள்ளது.
தற்போது, 356 கிலோ கொண்ட, ஒரு கேண்டி, இப்பருத்தியின் விலை,47,500 ரூபாய் என்ற அளவில் உள்ளது.உற்பத்தி:கரும்பு சாகுபடி பரப்பளவு, கணக்கீட்டு காலத்தில், 50.06 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 48.74 லட்சம் ஹெக்டேராகவும், சணல் மற்றும் மெஸ்தா ஆகியவற்றின் சாகுபடி பரப்பு, 8.45 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 8.31 லட்சம் ஹெக்டேராகவும் சரிவுஅடைந்துள்ளது.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை நன்கு பெய்யும் நிலையில், ஒட்டு மொத்த வேளாண் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, பல்வேறு ஆராய்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment