கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி துவங்கியது: தென்மாநில தொகுப்பில் 160 மெகா வாட் சேர்ப்பு
திருநெல்வேலி:கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதலாவது அணு உலையில், மின் உற்பத்தி வெற்றிகரமாக துவங்கி உள்ளது. நேற்று காலை, 160 மெகாவாட் மின்சாரம் திருநெல்வேலி மத்திய தொகுப்பில் சேர்க்கப்பட்டது. அந்த மின்சாரம், தென் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணுஉலையில், கிரிட்டிகாலிட்டி எனப்படும், மின் உற்பத்திக்கான நிலையை அடைவதற்கான பணிகள், கடந்த, ஜூலை 13ல் துவங்கியது. இந்த நிலையில், இந்திய அணுசக்தி ஆணையம் உற்பத்தி ஆயத்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. அதன் பிறகு, கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, உற்பத்திக்கான ஆயத்த பணிகள் துவங்கப்பட்டன.இதை அடுத்து, முதலாவது அணுஉலையில், நேற்று, உற்பத்தியான மின்சாரம், முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக மத்திய மின்தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
இது குறித்து கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறியதாவது: கடந்த, 21ம் தேதி இரவில், மின் உற்பத்திக்கான பணியில் ஈடுபட்டோம். அதிகாலை 2.45 மணிக்கு 75 மெகாவாட் மின்உற்பத்தியானது. படிப்படியாக மின்உற்பத்தி அதிகரித்து, இரண்டுமணிநேரத்தில், 160 மெகாவாட் மின்சாரம்கிடைத்தது. இதனை, திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பு மையத்திற்கு அனுப்பினோம். மின்உற்பத்தி, 160 மெகாவாட்டை எட்டியப பிறகு, ஜெனரேட்டரில் பாதுகாப்பு, பராமரிப்பிற்காக மின்உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு, நாளை, 23ம் தேதி மீண்டும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும். அதில், 300 முதல், 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தொடர்ந்து, 500 மெகாவாட் வரை உற்பத்தி செய்வோம்.
அதன் பின், இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் ஆய்வு மற்றும் அனுமதிக்கு பின், படிப்படியாக, 600, 800 என அதிகரித்து, ஆயிரம் மெகாவாட் வரையிலும் மின்சாரம் உற்பத்தியாகும். டிசம்பர் மாதத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.தொடர்ந்து, 72 மணி நேரம், ஆயிரம் மெகாவாட் நிலையிலேயே உற்பத்தி கிடைக்கும்.
இதில் தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவீடு, ஏற்கனவே
குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்அணுஉலையில் இருந்து, அதிகபட்சம், 562.5 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும். இரண்டாவது அணுஉலை அடுத்த ஜூன் மாதத்தில் மின்உற்பத்திக்கான, கிரிட்டிகாலிட்டியை துவக்க ஆரம்பிக்கும். இரண்டு அணுஉலைகளிலும் சேர்த்து, தமிழகத்திற்கு, 1,025 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment