Search This Blog

Friday, 6 December 2013

நிறவெறி ஆட்சியை எதிர்த்து 27 ஆண்டுகள் சிறையில் போராடியவர்! பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசை பெற்ற மண்டேலா காலமானார்…

நிறவெறி ஆட்சியை எதிர்த்து 27 ஆண்டுகள் சிறையில் போராடியவர்! பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசை பெற்ற மண்டேலா காலமானார்…

ஜோகன்ஸ்பர்க்:
தென்ஆப்ரிக்காவில் நிறவெறியை ஆட்சியை ஒழித்து கறுப்பின மக்களுக்கு அதிகாரம் பெற்று தந்த நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் காலமானார். தென்னாப்பிரிக்காவில் குலு கிராமத்தில் 1918ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி பிறந்த மண்டேலா, தனது 95வது வயதில் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதை தென்னாப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தொலைக்காட்சி மூலம் உலக நாடுகளுக்கு அறிவித்தார். நுரையீரல் தொற்று நோய் காரணமாக கடந்த ஜுன் மாதம் பிரிட்டோரியா மருத்துவமனையில் மண்டேலா அனுமதிக்கப்பட்டார். மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் அவரது இல்லத்திலேயே வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தான் மரணித்த பின்னர் தனது சொந்த கிராமத்தில் தன்னை அடக்கம் செய்ய மண்டேலா விருப்பம் தெரிவித்திருந்ததால், அவரது விருப்பம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. தென்னாப்பிரிக்க நாடு பெருமை வாய்ந்த குடிமகனை இழந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர், முழு அரசு மரியாதையுடன் மண்டேலாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரன அடக்குமுறைகளை எதிர்த்து, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து தீவிரமாக போராடிய மண்டேலாவை 1964ல் நிறவெறி வெள்ளையர் அரசு சிறையில் அடைத்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் 1990ல் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையோடு கறுப்பின மக்களுக்கும் நிறவெறி வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது. தென்ஆப்ரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபராகவும் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டேலா சிறையிலிருந்த போதே அவருக்கு நேரு சமாதான விருதையும், 1990ல் பாரத ரத்னா விருதையும் வழங்கி இந்தியா கௌரவித்தது. 1993ல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 2 மனைவிகளை கொண்ட மண்டேலாவிற்கு 5 பிள்ளைகள் உள்ளனர். தென்ஆப்ரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இந்தியா மீதான அளவற்ற பற்றை வெளிபடுத்திய மண்டேலாவின் செயல்பாடு மறக்க இயலாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment