லட்சக்கணக்கில் பணம் பாக்கி அரசு பஸ்களுக்கு டீசல் வழங்க பெட்ரோல் பங்க் திடீர் மறுப்பு
மார்த்தாண்டம் : குமரி மாவட்டம், மார்த்தாண்டம், குழித்துறை அரசு பணிமனைகளில் இருந்து, சுமார் 150க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களுக்கு தற்போது தனியார் பெட்ரோல் பங்குகள் மூலமாக டீசல் நிரப்பப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம், குழித்துறை அரசு பணிமனையில் உள்ள சில பஸ்கள், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்புவதற்காக கொண்டு நிறுத்தப்பட்டது. ஆனால் பங்க் ஊழியர்கள் டீசல் ஸ்டாக் இல்லை என்று கூறி விட்டனர். இதனால் பெட்ரோல் பங்க் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரத்துக்கு அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து டிரைவர்கள், கண்டக்டர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டதற்கு, லட்சக்கணக்கில் பணம் பாக்கி இருக்கிறது. பாக்கி பணத்தை வழங்கினால் மட்டுமே அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்ப நிர்வாகம் கூறியுள்ளது என்றனர். இது குறித்து உடனடியாக போக்குவரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அரசு பஸ்களை டெப்போவுக்கு எடுத்து செல்லும் படி அதிகாரிகள், டிரைவர்களுக்கு உத்தரவிட்டனர். அதன்படி அனைத்து பஸ்களும் டெப்போக்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
No comments:
Post a Comment