தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை : உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர்
தூத்துக்குடி : ""தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை, உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது,'' என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மத்திய இணை அமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் தெரிவித்தார். தூத்துக்குடியில் 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய இணை அமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் பேசியதாவது: இந்தியாவில் 1952 ல் ஜவஹர்லால் நேருவால் இ.எஸ்.ஐ., அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 151 மருத்துவமனைகள் உள்ளன. இதில் 34 மாடல் மருத்துவமனைகள் உள்ளது.61 மண்டலங்களின் கீழ் 808 கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் மதுரை, கோவை,திருநெல்வேலி, சேலம், ஆகிய இடங்களில் நான்கு மண்டலங்களில் எட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளன.75 ஆயிரத்து 819 வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. 23 லட்சம் காப்பீடு செய்த தொழிலாளர்கள் உள்ளனர். இதில் மதுரை மருத்துவமனை மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும், அது தமிழக அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இதனையும் எங்களிடம் ஒப்படைக்க அரசு தீர்மானித்தால், அதனை ஏற்று நடத்துவதற்கு தயாராக உள்ளோம். திருநெல்வேலி மண்டலத்தில் மூன்று மருத்துவ மனைகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டன. திருநெல்வேலியில் 2013 செப்., இருந்து செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 106 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் 100 படுக்கைகள் கொண்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட மருத்துவமனை அமைக்க அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜெயதுரை எம்.பி., தொடர்ந்த முயற்சியினால் இன்று விழா நடக்கிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் கட்டப்படவுள்ளது. திருநெல்வேலியில் போதுமான இட வசதியில்லாததால் குடியிருப்பு வளாகம், வாட்டர் பிளான்ட் போன்ற வசதிகள் செய்ய முடியவில்லை. திருப்பூர், ஸ்ரீபெரும்புதூரில் இந்தாண்டில் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் நிலம் வழங்கப்பட்டாலும் பிரச்னை காரணமாக கோர்ட் வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை கே.கே. நகரில் 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவக்கல்லூரியுடன் மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 100 மாணவர்கள் படிக்க முடியும். இதில் 65 இடங்கள் தமிழகத்திற்கும், அகில இந்திய ஒதுக்கீடு 15 பேருக்கும் மீதமுள்ளவை காப்பீடு செய்துள்ளவர்களின் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. கோவையிலும் மருத்துவக்கல்லூரியுடன் மருத்துவமனை இந்தாண்டு முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இன்ஸ்டியூட்டும் துவக்கப்படவுள்ளது.2013 ல் தமிழகத்திற்கு 228 கோடிரூபாயும், 2014 ல் இன்று வரை 116.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது தவறு, உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இ.பி.எப்., தொகை குறைந்த பட்சம் ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.எப்., தொகை அதிக உச்சவரம்பு 6,500 ஆக இருந்ததை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது போர்டு மீட்டிங்கில் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 34 லட்சம் தொழிலாளர்கள் கூடுதலாக பயன் பெறுவார்கள், என அவர் பேசினார். ஜெயதுரை எம்.பி., உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment