சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ ஊர்ஜிதம்
புதுடெல்லி : நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அறிக்கை மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரிடம் காட்டப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ ஊர்ஜிதம் செய்துள்ளது. இதையடுத்து, அவரை பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால், அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை விவரங்களை அரசிடமோ, அரசியல் தலைவர்களிடமோ பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று சிபிஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 8ம் தேதி, இந்த முறைகேடு விசாரணை குறித்த நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், விதிமுறைகளை மீறி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையை சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரிடம் சிபிஐ காட்டியதாகவும், பிரதமர் மன்மோகன் சிங்கை காப்பாற்றும் நோக்கத்துடன் அதில் அவர் திருத்தங்கள் செய்ததாகவும் பாஜ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல், ‘விசாரணை அறிக்கை யாருக்கும் காட்டப்படவில்லை’ என்று கூறினார். இது குறித்து சிபிஐ இயக்குனர் விளக்க அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா உச்ச நீதிமன்றத்தில் நேற்று விளக்க அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பாக, மத்திய சட்ட அமைச்சர் கேட்டு கொண்டதால் அவரிடம் காட்டப்பட்டது. விசாரணை விவரங்கள் அவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தை சேர்ந்த இணை செயலாளரிடமும் அறிக்கை காட்டப்பட்டது. இப்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, எந்த அரசியல் தலைவர்களிடமும் காட்டப்படவில்லை.
இனிமேல் தயாரிக்கப்படும் விசாரணை அறிக்கைகளை அரசியல் தலைவர்களிடம் காட்டமாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம்’ என்று ரஞ்சித் சின்கா கூறியுள்ளார்.
சிபிஐ இயக்குநர் அறிக்கையால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டதா என்ற தகவலை சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை. சிபிஐ அறிக்கையை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரும் பதவி விலக எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment