Search This Blog

Tuesday, 14 May 2013

மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை: ஜெ., அறிவிப்பு

மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை: ஜெ., அறிவிப்பு

சென்னை: மதுரையில் ரூ. 100 கோடி மதிப்பில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை முதல்வர் ஜெயலலிதா வாசித்தார். அதில், பெருமை வாய்ந்த தமிழ்மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல், தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக்கலைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் மற்றும் பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழ் ஆர்வலர்களுக்கு விருது: திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வெளிநாட்டு தமிழறிஞர் ஜி.யு. போப் தமிழ்த்தொண்டை போற்றும் வகையில், சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு. போப் விருதும், சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப்புலவர் விருதும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment