முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ரூ.984.70 கோடி
சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் 15,000 பண்ணைக் குட்டைகளும், இதர மாவட்டங்களில் 55,000 பண்ணைக் குட்டைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் நீரை சாகுபடி செய்ய டீசல் எஞ்ஜின்களுடன் கூடிய 700 மழை தூவுவான் மற்றும் நகரும் தெளிப்பு நீர்ப்பாசன அமைப்புகள், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவை 57 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, 350 வட்டாரங்களில், வட்டாரத்திற்கு இரண்டு என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
நடப்பாண்டில் 12,500 ஏக்கர் பரப்பிலுள்ள தரிசு நிலங்களை சீர்திருத்தி இடுபொருட்களை மானிய விலையில் வழங்கி சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஒட்டுமொத்தமாக 7 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கிராம, வட்டார, மாவட்ட அளவில் உணவு தானிய உற்பத்தியினை பெருக்க Òவிரைவுத் திட்ட அணுகுமுறைÓ செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 114 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 50,000 ஏக்கர் பரப்பில் துவரை நடவினை மேற்கொள்ளப்படும். இதில் 10,000 ஏக்கர் நடவு துவரைக்கு சொட்டு நீர்ப்பாசனம் அளிக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்த 55 கோடியே 60 லட்சம் ரூபாய் வழங்கப்படும். நீடித்த நிலையான கரும்பு உற்பத்தி திட்டம் 50,000 ஏக்கர் பரப்பளவில் 275 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சர்க்கரை ஆலைகள் மூலம் செயல்படுத்தப்படும்.
தரமான இடுபொருட்கள் உரிய தருணத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், Òசிறப்பு நோக்க அமைப்புÓ, ஒன்று தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை ஆணையரகத்தில் ஏற்படுத்தப்படும். இதற்காக 112 கோடியே 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நடப்பாண்டிலும் 124 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படும். 28 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 50 வட்டாரங்களில் Òவிவசாயிகள் சேவை மையம்Ó ஏற்படுத்தவும், 5 Òமாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையங்கள்Ó ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்னணு ஏல முறையில் விற்பனை இணைப்பு ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட வசதிகளையும் செயல்படுத்த 186 கோடியே 46 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் இளநீருக்கான சிறப்பு வணிக வளாகம் ஒன்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைக்கான சிறப்பு வணிக வளாகம் ஒன்றும், தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும், 23 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து தரப்படும். ஆக மொத்தம் 984 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள், வேளாண் உற்பத்தி அதிகரிக்கவும், வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் வழிவகுக்கும்.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment