நெல் வரத்து குறைவால் உயருது அரிசி விலை
நெல் வரத்துக் குறைவால், அரிசி விலை, மீண்டும்
உயர்ந்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து,
அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு வரப்படுகிறது. கடந்த பிப்ரவரி, மார்ச்சில்
அறுவடை முடிந்து, ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை, அரிசி ஆலைகளுக்கு,
முழுமையாக, நெல் வரத்து இருக்கும்.வறட்சியால், கடந்த மாதம் நெல் வரத்து, 50
சதவீதம் குறைந்தது. கர்நாடகா, ஆந்திரா நெல் கொண்டு வந்தால்,
கட்டுப்படியாகாது என்பதால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
பகுதிகளிலான நெல் வரத்தை, ஆலைகள் நம்பி உள்ளன.அரிசி விலையில் மாற்றம்
குறித்து, ஆலை அதிபர்களுடன், அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையைத்
தொடர்ந்து, ஒரு மாதமாக, அரிசி விலை நிலையாக இருந்தது. கூட்டுறவு அங்காடி
மூலம், 20 ரூபாய்க்கு அரிசி விற்பதாலும், வெளி மார்க்கெட்டில் அரிசி விலை,
மாற்றமின்றி இருக்கிறது. இந்நிலையில், சில நாட்களாகவே, அரிசி விலை
கிலோவுக்கு, 2 முதல், 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கிலோ, 50 ரூபாய்க்கு விற்ற சோனா பொன்னி, 53க்கும், கிலோ, 48 ரூபாய்க்கு
விற்ற டீலக்ஸ் பொன்னி, 50 ரூபாய்க்கும், 34 ரூபாய்க்கு விற்ற இட்லி அரிசி,
36 ஆகவும் உயர்ந்துள்ளது.அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "நெல்
வரத்து, குறைந்து விட்டது. இருப்பு வைத்துள்ள நெல்லை, அரைக்கிறோம். புதிதாக
வரத்து இல்லை. அப்படியே வரும் நெல் விலையும், மூடைக்கு, 50 முதல், 100
ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அரிசி, 100 கிலோ விலை, டீலக்ஸ் பழையது, 4,800
ரூபாய்; புதுசு, 3,700 ரூபாய், கல்சர், 3,200 ரூபாய்; அதிசய பொன்னி, 3,200
ரூபாய். இது கடைகளில், 2 முதல், 5 ரூபாய் வரை கூடுதலாக, விலை வைத்து
விற்கப்படுகிறது' என்றார்.
No comments:
Post a Comment