Search This Blog

Friday, 17 May 2013

வீரர்களை கவர இளம்பெண்கள்; எஸ்காட் பாதுகாப்பு:

வீரர்களை கவர இளம்பெண்கள்; எஸ்காட் பாதுகாப்பு:

புதுடில்லி: ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடும் வீரர்களுக்கு, இளம் பெண்களை சப்ளை செய்தும், எஸ்காட் பாதுகாப்பு அளித்தும் அவர்களை புக்கிகள் குஷிப்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கிட் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறி, மும்பையில் வைத்து டில்லி போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இவர்களுடன் இடைத்தரகர்கள் மற்றும் புக்கிகள் என மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேல் விசாரணைக்காக டில்லி அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடும் வீரர்களுக்கு புக்கிகள் விலைமாதுக்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சாண்டிலா ஆகியோருக்கு புக்கிகள் பெண்களை சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஸ்ரீசாந்த் கைது செய்யப்படும் போது அவருடன் பெண் ஒருவர் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதே போல், வீரர்களுக்கு சிறப்பு எஸ்காட் பிரிவையும் புக்கிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு: கைது செய்யப்பட்ட 3 வீரர்களும் தற்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த அவர்கள், தற்போது முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தங்களது தவறை உணர்ந்துள்ளதாகவும், இதற்காக வெட்கப்படுவதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சோதனை விரிவாக்கம்: ஸ்பாட் பிக்சிங் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, இந்த சீசனில் ராஜஸ்தான் அணி விளையாடிய மேலும் 15 போட்டிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், டில்லி, குஜராத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சோதனை: ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக சென்னையிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 6 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.டில்லி போலீசார் தந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.14 லட்சம் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10 கம்ப்யூட்டர்கள், 5 வயர்லெஸ் போன் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் எட்டு பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இவர்களுக்கு டில்லி, மும்பை, துபாயில் உள்ள புக்கிகளுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ரூ 25 ஆயிரம் முதல் ஒரு கோடி வரை பிக்சிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் வீரர் பிடிபட்டார்: ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட புக்கிகளில் ராஜஸ்தான் அணியில் கடந்த சீசன் வரை விளையாடிய அமித் சிங் என்பவரும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்பாட் பிக்சிங்கில் வல்லவரான இவர் தான் மற்ற ராஜஸ்தான் வீரர்களுக்கு புக்கிகளை அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment