தரிசு நிலங்களை விளை நிலங்களாக்க தமிழக அரசு திட்டம்:
சென்னை : தமிழகம் முழுவதும் தரிசாக உள்ள 12,500 ஏக்கர் நிலங்களை விளை நிலங்கள் ஆக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் விளை நிலங்களில் முறையான நீர் வசதி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.4000 மானியமாக வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா அறிவிப்பு :
தமிழகத்தில் 2வது பசுமை புரட்சியை ஏற்படுத்த பல விவசாய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசியதாவது : விளைநிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது; இந்த நிலையை மாற்றுவதற்காக தரிசாக உள்ள 12,500 ஏக்கர் நிலங்களை விளை நிலங்களாக மாற்றப்பட உள்ளது; அந்த நிலங்களுக்கு போதிய நீர் வசதி ஏற்படுத்த ஏக்கருக்கு ரூ.4000 மானியமாக வழங்கப்படும்; பண்ணைகள் அமைக்கவும் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படும்; இத்திட்டத்திற்காக ரூ.7.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்திற்கு தேவையான அனைத்து கருவிகளும் அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, குறைந்த வாடகையில் வழங்கப்படும்; இத்திட்டத்திற்காக ரூ.57 கோடி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதிய விவசாய திட்டங்கள் :
உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறுவதற்காக ரூ.114.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 3 விதமான அதிவிரைவு திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன; சர்க்கரை ஆலைகள், 50,000 ஏக்கர்களில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.275 கோடி செலவில் விவசாயிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க சிறப்பு பயன்பாட்டு வாகன அமைப்பு ஏற்படுத்தப்படும்; அரசு மானியத்துடன் பண்ணை உபகரணங்கள் வழங்க ரூ.125.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; தோட்டக்கலை வளர்ச்சியை உயர்த்தவும், விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்கவும் 50 மையங்கள் அமைக்கப்படும்; இந்த அமைப்புக்கள் மூலம் தரமான விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்படும்; இளநீர் மற்றும் வாழைகளுக்கு சிறப்பு விற்பனை நிலையங்கள் கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களில் கட்டப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுடன் சுகாதார ஒப்பந்தம் :
தமிழகத்துடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையிலான சுகாதார வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக கென்னத் கிளார்க் தலைமையிலான 26 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் வர்த்தக குழுவினர் இந்த வாரம் தமிழகம் வர உள்ளனர். இவர்களுடன் மத்திய அமைச்சர்களும், பிரதமரின் வர்த்தக தூதரும் தமிழகம் வர உள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள பிரிட்டன் தூதர், கிளார்க் தலைமையிலான குழுவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோரை மே 08ம் தேதி சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மே 09ம் தேதி நடைபெறும் இந்திய தொழில்துறை சார்பான கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். ஆரம்ப சுகாதாரம், சுகாதார மேலாண்மை, குடும்ப மருத்துவ சேவைகள், தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கல்வி, மருத்துவமனை வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு, மருத்துவ ஆலோசனை, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தனியார் கம்பெனிகள் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா-பிரிட்டன் சர்க்கரை நோய் கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய ஒப்பந்தம் போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment