Search This Blog

Monday, 6 May 2013

இந்திய பகுதியிலிருந்து சீனப்படைகள் திடீர் வாபஸ்: பின்னணியில் நடந்தது என்ன?

இந்திய பகுதியிலிருந்து சீனப்படைகள் திடீர் வாபஸ்: பின்னணியில் நடந்தது என்ன?

புதுடில்லி: இந்தியாவின் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து முகாமிட்டிருந்த சீனப்படைகள் திடீரென வாபஸ் பெறப்பட்டதன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள இந்திய பகுதியான தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில், கடந்த மாதம் 15ம் தேதி சீனப்படைகள் அத்துமீறி நுழைந்து டென்ட் அடித்தன. இதையடுத்து இந்தியா சீனா நாடுகளுக்கிடையே திடீர் பதட்டம் ஏற்பட்டது. படைகளை விலக்கிக்கொள்ளும்படி, இந்தியா பலமுறை கேட்டுக்கொண்டும் அதற்கு சீனா மறுப்பு தெரிவித்து விட்டது. இந்திய பகுதிகளுக்குள் சீனாவின் ஊடுருவலுக்கு நாட்டின் பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் சீனாவுக்கு எதிரான போராட்டங்களும் நடந்தன.

இவை ஒருபுறமிருக்க, இந்திய சீன ராணுவத்திற்கு இடையே நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 4வது பேச்சுவார்த்தைக்குப்பின் சீனா திடீரென தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அத்துடன் தான் அமைத்த டென்ட்டுகளையும் பிரித்தது. சீனாவின் இந்த திடீர் நடவடிக்கை பல்வேறு தரப்பினருக்கும் பெரும் ஆச்சர்யமளித்தது. சீனாவின் இந்த திடீர் மாற்றத்திற்கான பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 20 நாட்களாக நிலவி வந்த இந்திய சீன பதட்டத்தில், ஒரு கட்டத்தில் இந்தியா, சீனாவுடனான தனது உறவுகளை முற்றிலும் முறித்துக்கொள்வதென முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் ஒரு பகுதியாக, மே 9ம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது சீனப்பயணத்தை ரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஒருவேளை சல்மான் குர்ஷித்தின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுமானால், அது வரும் மே 20ம் தேதி இந்தியா வரவுள்ள சீனப்பிரதமர் லீ கெசியாங் பயணத்தை மிகவும் பாதிக்கும் என சீனா கருதியது. 10 ஆண்டுகளுக்குப்பின் சீனாவில் அதிகார மாற்றம் நடந்துள்ள நிலையில், புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள லீ கெசியாங்கின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவிற்குத்தான் என்பதால், அதில் பிரச்னை ஏற்பட சீனா விரும்பவில்லை.

மேலும், இந்தியாவுடனான சீன உறவுகள் முறித்துக்கொள்ளப்படும்பட்சத்தில், அது சீனாவின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும் என அந்நாடு கருதுகிறது. இந்தியா சீனா இடையே ஓராண்டில் நடக்கும் வர்த்தகம் சுமார் 90 முதல் 100 பில்லியன் டாலர் ( ரூ. 5 லட்சத்து 41 ஆயிரத்து 300 கோடி). இந்த வர்த்தக இழப்பை தாங்கிக்கொள்ளவும் சீனா விரும்பவில்லை.

இவை ஒருபுறமிருக்க, சீனாவும் இந்தியாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறது. அதில், தெற்கு லடாக்கின் சூமார் பகுதியில் இந்தியா தற்போது 7 பதுங்கு குழிகளை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதில் ஒரு பதுங்கு குழிகளை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிகிறது. கடந்த 2005ம் ஆண்டு இரு நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, அந்த பகுதியில் எந்த ஒரு நிலையான அமைப்பும் ஏற்படுத்தக்கூடாது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் இந்தியப்படைகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இவை சீனப்படைகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது என சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தற்போது பதுங்கு குழிகளை அமைப்பதை தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், சூமார் பகுதியில் நிலையான அமைப்புகளை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2005ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்யவும் இந்திய தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய சீன ராணுவத்திற்கு இடையே நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தற்போது இரு நாடுகளும் கடந்த ஏப்ரல் 15ம் தேதிக்கு முந்தைய நிலை தொடர ஒப்புக்கொண்டுள்ளன. இதையடுத்தே தற்போதைய எல்லைப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.

தங்களின் வருகைக்கு நன்றி

உங்கள் கருத்துகளை பதிவு செய்க

No comments:

Post a Comment