இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி இல்லை
தஞ்சை : இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணில் எந்த ராணுவப் பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்தார். தஞ்சையில், புதுக் கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளம் ரூ.150 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்திற்கு வந்தார்.
அவரை இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே.ப்ரவுனி, தென்னக வான்படை தலைமை கட்டளை அலுவலர் ஏர்மார்ஷல் ஆர்.கே .ஜோலி, எஸ்பி தர்மராஜ், டிஆர்ஓ சுரேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமானப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நவீனப்படுத்தப்பட்ட விமானப்படை தளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும், தஞ்சை விமானப்படையின் புகைப்பட கண்காட்சியையும், சுகோய்&30 என்ற 2 நவீன போர் விமானங்கள் பறந்து சென்றதையும் பார்வையிட்டார்.
பின்னர் அந்தோணி நிருபர்களிடம் கூறியது: 1984ம் ஆண்டு முதல் தஞ்சை விமானப்படை தளம் உருவாக்க ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கும், இங்குள்ள கிராம மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சை விமானப்படை தளம், ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி போர் விமானங்கள் நிறுத்தும் வகையில் மிகப்பெரிய விமானப்படை தளமாக உருவாகியுள்ளது. படைத்தளம் அமைந்துள்ள தென்னிந்திய பகுதி முக்கிய தொழில் நகரங்களையும், முக்கியமான இடங்களையும் கொண்டுள்ளது.
எனவே தீவிரவாத அச்சுறுத்தல், கடற்கொள்ளை, ஊடுருவல் போன்றவைகளிலிருந்து நாட்டை பாதுகாக்க இதுபோல் நவீன போர் விமானங்கள் மூலம் விமானப்படை தளத்தை வலுப்படுத்துவது அவசியமாகிறது. இது நம்மை நம்பியுள்ள நட்பு நாடுகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும் நாட்டின் பாதுகாப்பில் சமரசத்திற்கு இடமளிக்க முடியாது. தேசிய நலனுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.
தஞ்சை விமானப்படை தளம் இன்னும் சில ஆண்டுகளில் மேலும் மேம்படுத்தப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நாட்டிற்கு வரக்கூடிய எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது. ஒரு காலத்தில் மிக சாதாரணமாக இருந்த இந்திய ராணுவம் இன்று அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. 48 நாடுகள் நம்முடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் பல நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட பேச்சு நடத்தி வருகின்றன. சீனாவுடன் லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். ஜூன் முதல் வாரம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளேன். அப்போது கடற்படை கூட்டு ராணுவப்பயிற்சி மேற்கொள்வது குறித்து பேசப்படும்.
சட்டீஸ்கரில் நக்சல்களை ஒடுக்க ராணுவம் நேரடியாக ஈடுபடுத்தப்படாது. அதற்கு போலீசார், துணை ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் ராணுவம் நேரடியாக ஈடுபடுத்தப்படவில்லை.
மீட்பு பணியில் ஹெலிகாப்டர் மூலம் இரவு, பகலாக உதவி செய்யப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, தமிழ் மண்ணில் இலங்கை ராணுவத்தினருக்கு எந்த பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது. இவ்வாறு அந்தோணி கூறினார். பின்னர் ராணுவ சிறப்பு விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
உள்ளூர் மக்களுக்கு விரைவில் இழப்பீடு
விமானப்படை தலைமை தளபதி ப்ரவுனி கூறுகையில், ‘2017க்குள் தஞ்சை விமானப்படை தளம் நவீன போர் விமானங்கள் நிறுத்தி வைக்கும் வகையிலும், ரேடார் போன்ற நவீன கருவிகள் அமைக்கப்பட்டு முழுமையான ராணுவ பயிற்சி தளமாக மேம்படுத்தப்படும். தஞ்சை விமானப்படை தளம் அமைய ஒத்துழைப்பு அளித்த உள்ளூர் பொதுமக்களுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகைகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
No comments:
Post a Comment