தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மழை சூறாவளியில் செல்போன் டவர் விழுந்தது
அரூர் : கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்றால் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் பகுதியில் தென்னை மரம் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அரூர், தீர்த்தமலை சாலையில் உள்ள சங்கிலிவாடி பஸ் ஸ்டாப் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நடுரோட்டில் சாய்ந்தது.
இதனால், இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் செல்போன் நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாலை முதல் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காயும் நிலையில் இருந்த பயிர்கள் இந்த மழையின் மூலம் உயிர் பெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதிகபட்சமாக அரூரில் 131 மில்லி மீட்டர் மழை பதிவானது.
No comments:
Post a Comment