கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.642 கோடி !
புதுடில்லி: அரசில் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்கு செய்யப்பட்ட செலவு குறித்து விபரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 2004ம் ஆண்டு முதல் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.642 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான போயிங் ஜெட் விமானத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2013ம் ஆண்டு வரை பிரதமர் 62 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 62 பயணத்திற்கு ரூ.642 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 பயணத்திற்கான செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் , ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு சென்றதற்கான செலவு இதில் சேர்க்கப்படவில்லை.
பொது மக்கள் நலன் கருதி, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவலை வெளியிட அனைத்து அமைச்சகங்களும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் பங்கஜ் பச்சோரி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், கடந்த காலங்களில் பிரதமர் தனது சொத்து விபரத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது, முதல் முறையாக பிரதமர் கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்கு செய்யப்பட்ட செலவு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு ரூ.205 கோடி செலவு செய்யப்பட்டது சமூக ஆர்வலர் சுபாஷ் சந்த் அகர்வால், கேட்ட அறிக்கையில் வெளியானதை தொடர்ந்து, பிரச்னை ஏற்பட்டது. இந்த தொகை, அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தவர்கள் செய்த தொகையை விட அதிகமானது. பிரதீபா பாட்டீல் தனது பதவிக்காலத்தில், 4 கண்டங்களில் உள்ள 22 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் மெக்சிக்கோவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள சென்றதற்கான செலவு அதிகமாக உள்ளதாக தெரிகிறது. இந்த பயணத்திற்காக ரூ.27 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து, கடந்த 2008ம் ஆண்டில், 9 நாள் பயணமாக அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு சென்றதற்கு ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும், அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷூடன் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பின்னர் இந்தியா- ஐரோப்பியா மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றார். இதன் பின்னர் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பின் பேரில் வாஷிங்டன் சென்றார். அதன் பின்னர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க டிரினாட் மற்றும் டுபாகோ சென்றார். இந்த பயணத்திற்கு ரூ.21 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், ஏப்ரல் 2010ம் ஆண்டு அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்னர் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றார். இதற்காக பிரதமர் மேற்கொண்ட 8 நாட்கள் பயணத்திற்கு ரூ.22 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல், அமெரிக்காவிற்கு அதிகமாக 8 முறை சென்றுள்ளார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திற்கு நான்கு முறை சென்றுள்ளார்.
No comments:
Post a Comment