சத்தீஸ்கரில் நக்சல் கமாண்டர் சுட்டுக்கொலை
ராஜ்நந்த்கான்: சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே நடந்த சண்டையில், நக்சல் கமாண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு, மாநில அரசு ஏற்கனவே, 2.10 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, ராஜ்நந்த்கான் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுக்லா கூறியதாவது: ராஜ்நந்த்கான் நகரிலிருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள, பக்மார்கா பகாடி வனப்பகுதியில், மாவட்ட போலீசாரும், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையினரும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்களுடன் சண்டை ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த, இந்தக் கடும் சண்டையில், நக்சலைட் அமைப்பின் கமாண்டரான, உதாம் சிங் என்பவர் கொல்லப்பட்டார்; மேலும், இரண்டு நக்சலைட்கள் காயமடைந்தனர். சண்டை நடந்த பகுதியில், கடும் மழை பெய்ததால், காயமடைந்த நக்சலைட்கள் தப்பி ஓடி விட்டனர். கொல்லப்பட்ட உதாம் சிங்கின் உடல் கைப்பற்றப்பட்டது. அத்துடன், நக்சலைட்கள் விட்டுச் சென்ற, ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு சஞ்சீவ் சுக்லா கூறினார்.
No comments:
Post a Comment