Search This Blog

Monday, 19 August 2013

நூரி கொலை வழக்கு; 21 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

நூரி கொலை வழக்கு; 21 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

தெரணியகலை நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேராவை கொலைசெய்து அவரின் பாதுகாவலர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 21 பேரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு, அவிசாவளை பிரதான நீதவான் டி.எம். அனுஷ்க செனவிரத்ன முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில், அவர்களை சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றியபோது இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான அத்தகொட்டா என்றழைக்கப்படும் தெரணியகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அமில விஜயசிங்க அங்கிருந்த புகைப்பட ஊடகவியலாளர்களை தூஷணத்தில் ஏசியுள்ளார்.

பிரதான நீதவானின் வாசஸ்தலத்தில் வைத்தே இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில், வழக்கின் 14 ஆவது சந்தேகநபரான சிதம்பரம் பழனியாண்டி, இரகசிய வாக்குமூலமளிப்பதற்கு நீதவானின் அனுமதிகோரிநின்றார்.

அவ்வாறு வாக்குமூலம் அளிப்பதனால் விசேட நிவாரணம் எதுவும் கிடைக்காது, அவ்வாறு அளிக்கப்படும் இரகசிய வாக்குமூலம்; சந்தேகநபருக்கு எதிரான சாட்சியாக மேல்நீதிமன்றத்தினால் எடுக்கப்படலாம் என்றுதெரிவித்த நீதவான், இரகசிய வாக்குமூலமளிப்பது தொடர்பில் நன்றாக சிந்தித்து எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதுவரையிலும், ஏனைய சந்தேகநபர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தி வைக்குமாறு குருவிட்ட சிறைச்சாலைகள் அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான குற்றப்புலனாய்வு பிரிவின் உப-பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம் பொல்வத்த, குற்றம் இடம்பெற்ற இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஜீப் வண்டிகள் இரண்டிலிருந்து கைப்பற்றப்பட்ட உடல் எச்சங்கள் ஜின்டெக் நிறுவனத்திடம் ஒப்படைப்பட்டுள்ளன என்று நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

எனினும், இந்த சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டால் 15 இலட்சம் ரூபாய் தருவதாக கூறிய 11 ஆவது சந்தேகநபரின் கூற்று தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவிருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

No comments:

Post a Comment