1444 அரசியல் கட்சிகளையும் ஆர்.டி.ஐ.,யில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு முடிவு
புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்படாமல் 6 தேசிய கட்சிகளை மட்டும் காப்பாற்ற உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டில் உள்ள 1444 அரசியல் கட்சிகளையும் காப்பாற்ற முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு முயற்சி : @@ஆர்.டி.ஐ., மூலம் விபரம் கேட்பதில் இருந்து 6 தேசிய கட்சிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் இதனை தேசிய மற்றும் மாநில கட்சிகளான 52 கட்சிகளுக்கு விரிவுபடுத்தியது. தற்போது நாட்டில் உள்ள 1444 அரசியல் கட்சிகளையும் ஆர்.டி.ஐ.,யின் கீழ் உட்படுத்துவதில் இருந்து காப்பாற்ற முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங்கின் கையெழுத்து பெற்ற பின்னர் சட்ட திருத்தம் கொண்ட வர பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் ஆணையத்தால் 18.01.2013 அன்று அங்கீகரிக்கப்பட்ட 1444 அரசியல் கட்சிகளிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் பெறுவதில் இருந்து பாதுகாக்கப்பட உள்ளதாக அமைச்சரவை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட திருத்தம் : @@அரசியல் கட்சிகளை ஆர்.டி.ஐ., கீழ் கொண்டு வருவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் பா.ஜ., வலியுறுத்தியது. மழைக்கால கூட்டத்தொடரின் போது பார்லி., நிலைக்குழு முன் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் அவசரம் காட்டி வருகின்றன. குற்றம்சாட்டப்பட்ட உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அவசர சட்டத்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசி உள்ளதும், ஆர்.டி.ஐ.,யில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருவதும் அரசியல் களத்தில் பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
ரூ.12 கோடி நன்கொடை :@@ ஆர்.டி.ஐ.,யில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்க அளிக்க கோரிக்கை எழுந்துள்ள சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.12 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.10 முதல் லட்சம் வரை ரிக்ஷா தொழிலாளர்களால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவை வெளிநாட்டு இந்திய வர்த்தகர்களால் சட்டமன்ற தேர்தலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்த 12 கோடியில் பெரும்பாலான தொகை அரசியல் கட்சிகளுக்கு முதல் முறையாக நிதி வழங்கியவர்களால் தரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி இலக்கு நிர்ணயித்திருந்த ரூ.20 கோடி நன்கொடை வசூலில் தற்போது ரூ.6.20 கோடி இந்தியாவில் இருந்தும், மற்றவைகள் அமெரிக்கா, ஹாங்காங், கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, யு.ஏ.இ., சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களால் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ரூ.10 லட்சம் வரை வசூலாவதாகவும், 4000 க்கும் மேற்பட்டவர் ரூ.1,16,67,059 வரை அளித்து வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment