Search This Blog

Monday, 21 October 2013

தென்கிழக்கு பகுதியில் காற்று சுழற்சி : தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும்

தென்கிழக்கு பகுதியில் காற்று சுழற்சி : தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டியது. கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மாவட்டங்களில் 2 நாள் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, காற்று சுழற்சி வட மேற்கு திசையில் நகர்ந்ததால் வட தமிழகத்தில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி, விடிய,விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதே போல், விழுப்புரம், கடலூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

சென்னையில் இன்றும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் 80 மிமீ, மீனம்பாக்கத்தில் 70 மிமீ மழை நேற்று பதிவாகியுள்ளது. வளி மண்டல காற்று சுழற்சி இன்று காலை வட மேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நிலை கொண்டுள்ளது.

அதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் இன்று காலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சென்னை நகர் முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினர். கூவம், பக்கிங்காம், அடையாறு ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. மழை நீர் இந்த ஆறுகளில் கலந்து பெருக்கெடுத்து கழிவுகளோடு ஓடியதால் ஆற்றுக்கரைகளில் உள்ள குடிசைகளில் மழை நீர் உட்புகுந்தது.

தண்டையார்பேட்டை பகுதிகளில் வீடுகளில் மழை நீர் உட்புகுந்தது. பல இடங்களில் சாக்கடைகள் அடைத்துக் கொண்டதால் கழிவுநீரும் மழைநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கின. மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடக்கும் இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கியதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ராயப்பேட்டை, சாந்தோம் உட்பட பல்வேறு பகுதிகளில் 26 மரங்கள் விழுந்தன. மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அந்தந்த பகுதியினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம், கேரளா, லட்சத்தீவு, கடலோர மற்றும் உட்புற ஆந்திரா, ஆந்திரா, கர்நாடகா, ராயலசீமா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இம்மாநிலங்களில் மழை நீடிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும். டலோரப்பகுதிகளில் வடகிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும். அதே போல மேற்கு திசையிலிருந்தும் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால், சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்தார். இதே போல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மழை அதிகரித்தால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment