தமிழகத்தை இருளில் வைக்க சதி...: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
சென்னை: மத்திய அரசு மின் உற்பத்தியை உயர்த்தி அதை, தமிழகத்துக்கு தராவிட்டால் தமிழகத்தை இருளில் வைக்க சதி செய்வதாக தமிழக மக்கள் நினைப்பார்கள்'' என பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிறுவனங்களின் கீழ் செயல்பட்டு வரும் மின்உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தியை அதிகரித்து, அதை தமிழகத்துக்கு தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழக மின் உற்பத்தி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 12 அனல் மின் நிலைய பிரிவுகளிலும் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வல்லூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி முடங்கியுள்ளது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 5600 மெ.வா. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெய்வேலியில் இருந்து 1,113 மெகாவாட்டிற்கு பதில் 777 மெ.வா. மின்சாரமே கிடைக்கிறது. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் பராமரிப்பு பணியால் நெய்வேலியில் இருந்து 336 மெ.வா. குறைவான மின்சாரம்தான் கிடைக்கிறது.
எனவே, மத்திய நிறுவனங்களின் கீழ் செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மின்சாரத்துறை, நிலக்கரித்துறைக்கு பிரதமர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு மின் உற்பத்தியை அதிகரித்து, தமிழகத்திற்கு விநியோகிக்கும் மின்சாரத்தையும் அதிகமாக தர வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
No comments:
Post a Comment