குமரியில் விவேகானந்தர்-திருவள்ளுவர் பாறைகளை இணைத்து பாலம் அமைக்கப்படுமா:
கன்னியாகுமரி:கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகுசேவை பெரும்பாலான நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதால் சுற்றுலாபயணிகள் திருவள்ளுவர் சிலையை காணமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை நீடிக்கிறது. இதனால் இரு பாறைகளையும் இணைத்து பாலம் அமைக்க
வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வான்மறை புலவர் வள்ளுவருக்கு சிலை அமைக்க எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, தி.மு.க., ஆட்சியில் 2000-ம் ஆண்டின் முதல்நாளன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. கடல் காற்று சுழன்று அடிக்கும் கடலுக்குள் எவ்வித பிடிமானமும் இல்லாமல் 133 அடி உயரத்துக்கு கம்பீரமாக நிற்கும் இந்த சிலை இந்திய கட்டடக்கலைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாபயணிகளை ஏற்றிசெல்லும் படகு சேவையை தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடத்திவருகிறது. இதற்காக எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் குறைந்தது 6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாபயணிகள் பார்வையிட்டுவருகின்றனர்.காலை 8 மணிக்கு துவங்கும் இந்த படகு சேவை மாலை 4 மணிவரை இடைவிடாமல் இயக்கப்பட்டுவருகிறது. இதற்காக சுற்றுலாபயணி ஒருவருக்கு 34 ரூபாயும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியருக்கு 50 சதவீதம் சலுகை கட்டணமாக 17 ரூபாயும் , கியூவில் நிற்காமல் நேரடியாக செல்ல விரும்புபவர்களுக்கு சிறப்பு கட்டணமாக 167 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதில் திருவள்ளுவர் சிலைக்கு பராமரிப்பு பணிக்காக ஐந்து ரூபாய் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சி கழகத்திற்கு செல்கிறது. இது தவிர விவேகானந்தர் நினைவுமண்டபத்தில் உள்ளே செல்லும் போது ஒருவருக்கு தலா 20 ரூபாய் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சுவாமிவிவேகானந்தர் நினைவுமண்டபம் அமைந்துள்ள பாறையில் இயற்கையாகவே படகுதளம் சரியாக அமைந்துள்ளதால் கடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும் பயணிகளை இறக்கிவிடுவதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. ஆனால் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள படகுதளம் தாழ்வாக அமைந்துள்ளதால் கடல் நீர்மட்டம் தாழ்வு மற்றும் கடல் சீற்றம் போன்ற காலகட்டங்களில் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக இறக்கமுடிவதில்லை. இதனால் பெரும்பாலான நேரத்திலும் இங்கு படகு செல்லாது. திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்கவேண்டும் என்றால் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பார்க்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. விவேகானந்தர்- திருவள்ளுவர் பாறைகளுக்கிடையே உள்ள துரம் சுமார் 70 மீட்டர். இந்த இரு பாறைகளையும் இணைத்து தொங்குபாலம் அமைத்தால் பாலத்தில் நின்றவாறே கடல் அழகையும் ரசிக்கலாம். திருவள்ளுவர் சிலையை சுற்றி பார்க்க முடியவில்லைஎன்ற சுற்றுலாபயணிகளின் ஏக்கமும் தீரும். மட்டுமல்லாமல் படகுகளின் பயண நேரமும் சேமிக்கப்படும். இணைப்புபாலம் அமைக்கப்பட வேண்டும் என்று சுற்றுலாபயணிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசை வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரிக்கு வரும் தமிழக சட்டசபைகுழுக்கள் ஆய்வு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என்று பலமுறை அறிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆண்டிற்கு பெரும்பாலான நாட்கள் திருவள்ளுவர்சிலைக்கு படகுசேவை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது. மேலும், சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபத்திற்கு மட்டும் படகு சேவை நடத்தப்படுவதால் பயண நேரம் குறைவதோடு பூம்புகார் ஊழியர்களின் பணிசுமையும் குறையும் என்பதால் திட்டமிட்டு சில அதிகாரிகளின் சதியும் இதில் உள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இது குறித்து சுற்றுலாத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இணைப்பு பாலம் குறித்து, ஏற்கனவே தமிழக அரசுக்கு திட்டமதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டில் ஒன்றரைகோடி ரூபாய் செலவுதொகை என அனுப்பினோம். ஆனால், அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலை திறக்கப்பட்டபின் இதுவரை மூன்று முறை சிலை பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. இரு மண்டபங்களையும் இணைத்து இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற குழுக்களும் பரிந்துரைத்துள்ளது. இணைப்பு பாலம் கட்டினால் சுற்றுலா பயணிகள் எந்த சூழ்நிலையிலும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியும். இதுபற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றுலாத்துறை
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment