ஜாதி ரீதியாக அ.தி.மு.க., கட்சி செயல்படுகிறது : ஆதித்தமிழர் பேரவை அதியமான் சொல்கிறார்
தூத்துக்குடி : தமிழகத்தில் அ.தி.மு.க., கட்சி ஜாதி ரீதியாக ஆதிக்க சகத்திகளுக்காக செயல்படுகிறது, என ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தெரிவித்தார். தூத்துக்குடியில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை தி.மு.க., கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. காரணம் தாழ்த்தப்பட்ட மக்களில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் அருந்ததிய இன மக்களுக்கு மூன்று சதவீதம் உள் ஒதுக்கீ தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டது. சதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் அமைக்க தி.மு.க., அரசு உத்தரவிட்டது. இதில் பணிகள் நிறைவு பெறும் நிலையில், மூன்று ஆண்டுகளாக மணி மண்டபம் திறக்கப்படவில்லை. ஆக., 20 போராட்டம் நடத்தியும் பயனில்லை. தற்போதைய அ.தி.மு.க., அரசு அறிவிப்பு அரசாக மட்டுமே உள்ளது. மனிதன் மலத்தை, மனிதன் அள்ளும் நிலையை தடை செய்து, அதற்காக 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நவீன கருவிகள் வாங்கியது தி.மு.க., அரசு. தூய்மை பணியாளர் நல வாரியம், தோல் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அருந்ததியர் பயன் பெற்றது தி.மு.க., ஆட்சியில் தான். தி.மு.க., கட்சியினை லோச்சபா தேர்தலில் ஆதரித்து பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு தனித் தொகுதிகள் உள்ளன. இதில் இரு தொகுதிகளை அருந்ததிய இனத்தை சார்ந்தவருக்கு தி.மு.க., கூட்டணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போதைய அ.தி.மு.க., அரசு ஜாதி ரீதியாக ஆதிக்க சக்திகளுக்காக செயல்பட்டு வருகிறது. தென்காசி தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் கிருஷ்ணசாமி கட்சி போட்டியிடும் போது, உள் ஒதுக்கீடு குறித்து பேச மாட்டோம், என உத்திரவாதம் வழங்க வேண்டும், இல்லையெனில் அங்கு புதிய தமிழகம் கட்சிக்கு அருந்ததியர்கள் ஓட்டு போட மாட்டார்கள், என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment