குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு ரேஷன் கார்டை ஒப்படைத்த மக்கள்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் தாங்கள் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைத்து மக்கள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வநாயகபுரம் காலனி பகுதியில் குடியிருக்கும் மக்கள் 60 ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால், குடியிருப்புகளை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரறிவாளன் கூறுகையில்,""60 ஆண்டுகளுக்கு மேலாக 70 வீடுகளில் 225 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருகிறது. நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை இல்லை. எனவே போராட்டம் நடத்தினால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம்,'' என்றார். இசக்கியம்மாள் கூறுகையில்,""கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். அனைத்து அதிகாரிகள், அரசியல்வாதிகளிடமும், மனு கொடுத்து ஓய்ந்து போய்விட்டோம். இது வரை நடவடிக்கை இல்லை. இன்று ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியுள்ளோம். வரும் தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார். கலெக்டர் ரவிக்குமார் கூறுகையில்,""தேர்தல் நேரத்தில் இது போன்ற போராட்டங்கள் நடத்துவது வாடிக்கை தான். அவர்கள் மனு கொடுத்துள்ளனர். இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment