Search This Blog

Monday, 29 April 2013

சிவகாசியில் மூன்று நாளில் 2வது சம்பவம்: பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி

சிவகாசியில் மூன்று நாளில் 2வது சம்பவம்: பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி

சிவகாசி : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்தைத் தொடர்ந்து, ஆலை உரிமையாளர், நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். சிவகாசி பகுதியில் கடந்த 3 நாளில் நடந்த 2வது வெடி விபத்து இது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி பிகேஎஸ்ஏ தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு சொந்தமான `ரத்னா பட்டாசு ஆலை'' சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் உள்ளது.

இங்கு 60க்கும் மேற்பட்ட அறைகளில், சுமார் 200 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று விடுமுறை நாளில் 12 தொழிலாளர்கள் ஆலையில் பணியில் இருந்தனர். இவர்கள் பட்டாசு தயாரிக்க தேவையான ரசாயன மூலப்பொருள் கலவையை, மரத்தடியில் வைத்து தயாரித்துள்ளனர். காலை 10.20 மணியளவில் உராய்வு காரணமாக ரசாயன மூலப்பொருள் கலவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், சிவகாசி அருகே ஜமீன்சர்வார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (48), நாரணாபுரம் ரத்னா காலனியை சேர்ந்த செல்லையா (35), இவரது உறவினர் கனி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், நாரணாபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி (40), பவுன்காந்தி (38), பால்ராஜ் (50), நடராஜ் (45), முருகன் (45), மாரிமுத்து (35), மதுரைவீரன்(34), கருப்பசாமி (50), பாண்டி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். பவுன்காந்தி மேல்சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் சிவகாசி தீயணைப்பு நிலைய இயக்குனர் சண்முகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். ஆலை வளாகத்தின் திறந்தவெளி பகுதி முழுவதும் ரசாயன மருந்து கலவை உலர வைக்கப்பட்டிருந்ததால், தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. விபத்தை அடுத்து, பட்டாசு ஆலை நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.
           " கார்த்திக்விக்கி "
    தங்களின் வருகைக்கு நன்றி

No comments:

Post a Comment