ஒரு கிலோ ரூ.20 திட்டத்தில் புதிய ரக அரிசி விரைவில் விற்பனை
கோவை : தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் முதல் கட்டமாக 100 இடத்தில் துவக்கப்பட்டது. தற்போது, மேலும் 50 இடங்களில் அரிசி விற்பனை மையம் துவங்கியுள்ளது. இந்நிலையில், 20 ரூபாய் அரிசியில் தரமில்லை, ரேஷன் அரிசி போல் இருக்கிறது என பல்வேறு இடங்களில் புகார் வந்தது. இது குறித்து நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு துறையினர் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து, தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசிக்கு பதிலாக புதிய ரக அரிசி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 29 அல்லது 30ம் தேதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதியில் உள்ள சிஆர் 1009, ஆந்திர மாநிலத்தின் ஹம்கா ரக புழுங்கல் அரிசி மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பரிமள் என்ற பச்சரிசி ரகமும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில் சுமார் 10 ஆயிரம் டன் புதிய ரக அரிசி கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரகம் வந்தால் மதுரை, திண்டுக்கல் பகுதியிலிருந்து வரும் மோட்டா ரக புழுங்கல் அரிசி கொள்முதல் செய்வது நிறுத்தப்படும்.
தமிழக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இனி 4 ரக அரிசி விற்பனை மையங்களில் காட்சிக்கு வைக்கப்படும். மக்கள் இதை பார்த்து பில் வாங்கி அரிசி பெற்று செல்லலாம். சிஆர் 1009, ஹம்கா அரிசி சன்னமாக இருக்கும். மேலும் அரிசியை அளந்து வழங்குவதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது. எனவே அரிசி மண்டி போல் 5 கிலோ, 10 கிலோ, 15 கிலோ, 20 கிலோ என ‘பேக்கிங்Õ முறையில் அரிசி விற்க திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனை மையங்களில் பேக்கிங் மெஷின் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது,Ó என்றார்.
No comments:
Post a Comment