இந்து முன்னணியினர் மீதான தாக்குதல் கண்டித்து
3 மாவட்டங்களில் கடையடைப்பு: பஸ்கள் மீது கல்வீச்சு
கோவை: நீலகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் மஞ்சுநாத்தை கடந்த 14ம் தேதி மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த மஞ்சுநாத் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குன்னூரில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஹரிஹரன், நிர்வாகிகள் ஜெயக்குமார், வெங்கட்ராமன், சரவணக்குமார் ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டினர். இந்த தாக்குதல்களை கண்டித்து கோவை, நீலகிரி, திருப்பூர், மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.
கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பொள்ளாச்சி மற்றும் கோவையில் 11 அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேரை தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மினி பஸ், ஆட்டோ, சுற்றுலா வாகனங்களும் இயங்கவில்லை. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊட்டியில் சில ஓட்டல்கள் தவிர பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு பஸ் நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், மசூதிகள், சர்ச்கள் போன்ற பகுதிகளில் அதி விரைவு படை போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூரில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment