RE VIDEOS
புதுடெல்லி: ஐந்து வயது சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த காம கொடூரன் மனோஜ் குமார், பீகாரில் மாமனார் வீட்டில் சிக்கினான். சிறுமி பலாத்கார சம்பவத்தை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தலைநகர் ஸ்தம்பித்தது. பேராட்டக்காரர்களை அடக்க, 144 தடையுத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர். கிழக்கு டெல்லி காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, அவளது பக்கத்து வீட்டுக்காரன், கடந்த 15ம் தேதி கடத்தினான். சிறுமியை காணவில்லை என்று கடந்த 4 நாட்களுக்கு முன் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்திருந்தனர். காணாமல் போன சிறுமியை உறவினர்களும் போலீசாரும் தேடி வந்த நிலையில், அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள அறையில் இருந்து நேற்று முன்தினம் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அழுகுரல் சத்தம் கேட்டதும் பதற்றமடைந்த பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் உடனடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து சிறைவைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர்.
அந்த வீட்டில் யாரும் இல்லை. அங்கு குடியிருந்தவனும் இல்லை. மீட்கப்பட்ட சிறுமியின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததை பார்த்து பதறி துடித்த படி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த சிறுமி மிக கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. கடந்த டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மக்கள் மனதிலிருந்து இன்னும் நீங்காத நிலையில், 5 வயது குழந்தையை காமகொடூரன் ஒருவன் சீரழித்தது, மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் பல இடங்களில் அரசியல் கட்சிகள், தொண்டு அமைப்புகள், சமூக அமைப்புகள் என பலரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். குற்றவாளி யார் என்று தெரிந்து விட்டது என்றும் அவனை விரைவில் பிடிப்போம் என்று நேற்று முன்தினம் போலீசார் உறுதியளித்தனர்.இந்த நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில்
வசித்து வந்தவன் பெயர் மனோஜ் குமார் என்பது தெரிந்தது. அவனது செல்போனை வைத்து அவன் பீகார் மாநிலம் முசாபர்பூரில் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, நேற்று காலை பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு போலீசார் சென்றனர். அங்கு அவன் பதுங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடித்து முற்றுகையிட்ட போலீசார், மனோஜ் குமாரை கைது செய்தனர். அது அவனது மாமனார் வீடு என்பது தெரிந்தது.மனோஜ் குமாரை கைது செய்தது பற்றி கிழக்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் கூறியதாவது:மனோஜ் குமாரை டெல்லிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பார்புபா கிராமத்தை சேர்ந்த குமாரின் தந்தை பிந்தேஸ்வரி சாகி. இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுக்கு முன் டெல்லிக்கு வந்துள்ளனர். பழைய சீலாம்பூரில் குமாரின் தந்தை, ஜூஸ் கடை நடத்தி வருகிறார். குமாருக்கு 2 சகோதரர்கள், 4 சகோதரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பீகாரில் வசிக்கின்றனர். குமார், டெல்லியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறான்.
குமாருக்கு கடந்த ஆண்டுதான் திருமணமாகியுள்ளது. குமாரிடம் விசாரணை நடத்திய போது, கடந்த 15ம் தேதி பீகாருக்கு சுதந்திர சீனனி எஸ்பிரஸ் ரயிலில் சென்றதாக தெரிவித்தான். இதற்காக வீட்டை வீட்டு இரவு 7 மணிக்கு புறப்பட்டு ரயில் நிலையத்துக்கு சென்றதாகவும் தெரிவித்தான். சிறுமியின் தாய், வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை 15ம் தேதி மாலை 6 மணி முதல் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். குமார் மற்றும் குழந்தையின் தாய் கூறியது உண்மையாக இருந்தால், இந்த கொடூர சம்பவம் ஒரு மணி நேரத்துக்குள் நடந்திருக்க வேண்டும். மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு சென்றதாக குமார் கூறுகிறான். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது இப்போது தெரியாது. குமாரிடம் முழுமையாக விசாரணை நடத்தியபின்தான் எல்லா உண்மைகளும் தெரியும். பலாத்காரம் செய்ததில் சிறுமி இறந்துவிட்டாள் என்று நினைத்து, மாமனார் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் குமார் தெரிவித்தான். அந்த அறையில் 40 மணி நேரத்துக்கு மேல் அந்த சிறுமி இருந்துள்ளாள் என்பது தெரிகிறது. இவ்வாறு துணை கமிஷனர் பிரபாகர் கூறினார்.
குழந்தையின் உடல்நிலை
எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் நிலை குறித்து டாக்டர்கள் கூறியதாவது: குழந்தையை அந்த கொடூரன், மிகவும் சித்ரவதை செய்து பலாத்காரம் செய்துள்ளான். அவளது உடல் நிலை இப்போது சீராக உள்ளது. எனினும், குழந்தையின் மர்ம உறுப்புகள் படுகாயம் அடைந்துள்ளன. அவளுக்கு நினைவு உள்ளது. கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறாள். அவளது உடல் உறுப்புகள் நன்கு செயல்படுகின்றன. அவள், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படவில்லை என்றாலும், அவளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
ஆர்ப்பாட்டம் ஆவேசம்
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் நேற்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மத்திய டெல்லி, ஐடிஓ அருகே போலீஸ் தலைமையகம் உள்ளது. பலாத்கார சம்பவங்களை தடுக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, போலீஸ் தலைமையகம் முன் பெண்கள் அமைப்பினர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள், ஆம் ஆத்மி கட்சியினரும் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். அவர்களை தடுக்கும் நோக்கில் சாலையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். தடுப்புகளை உடைத்து கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து, போலீசுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.சிறுமி சேர்க்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அருகேயும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடந்தன.
சோனியா வீட்டு முன் போராட்டம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் வீடு உட்பட பல இடங்களில் பா.ஜ, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸ் கமிஷனர் நீரஜ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால், டெல்லி நகரமே நேற்று ஸ்தம்பித்தது.
ஆம் ஆத்மி கோரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய போலீஸ் துணை கமிஷனர் பி.எஸ்.அலாவத்தை சஸபெண்ட் செய்தால் போதாது. அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், காந்தி நகர் போலீஸ் நிலைய சப்&இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி சிறுமியின் பெற்றோருக்கு பணம் கொடுக்க முயற்சித்துள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment