ஜூன் 1ம் தேதி முதல் பெட்ரோல் விலை உயர்கிறது
புதுடெல்லி: பெட்ரோல் விலையை வரும் ஜூன் 1ம் தேதி முதல் லிட்டருக்கு
ரூ.1 உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதேபோல்
டீசல் விலையையும் லிட்டருக்கு 45 காசுகள் உயர்த்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை மாதம்
இருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 3
ஆண்டுகளாக இந்த நடைமுறை பழக்கத்தில் இருந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு
எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஒரே நிலையில் இருந்த
காரணத்தாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும் கடந்த 3
முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து பெட்ரோல் விலையை வரும் ஜூன் 1 முதல் லிட்டருக்கு ரூ.1 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பு நாளை மாலைக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை நீக்கியது போல் டீசல் மீதான கட்டுப்பாட்டையும் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு ஓரளவு தளர்த்தியது.
அதன்படி மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலை ஒரே கட்டமாக லிட்டருக்கு ரூ.11 அளவுக்கு உயர்த்தப்பட்டது. பங்க்குகளில் போடப்படும் டீசல் விலையை மாதம் 50 காசுகள் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு முறை டீசல் விலை உயர்த்தப்பட்டது. கர்நாடக தேர்தல் காரணமாக கடந்த இரண்டு மாதமாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் வரும் ஜூன் 1 முதல் டீசல் விலையையும் லிட்டருக்கு 45 காசுகள் உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment