பான்மசாலா, குட்காவுக்கு கர்நாடக அரசு தடை
பெங்களூர்: உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று முதல் கர்நாடக
மாநிலத்தில் பான்மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு உணவு பாதுகாப்பு
மற்றும் தர சட்டத்தில் சில திருத்தங்களை செய்தது. அதன்படி, மென்று
விழுங்கக்கூடிய குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை
விதிக்கப்பட்டது. இந்த தடையை அனைத்து மாநிலங்களும் உடனடியாக அமல்படுத்த
வேண்டும் என அறிவுரை வழங்கியது.
மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றி பல மாநிலங்கள் குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடை விதித்தன. சில மாநிலங்களில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அதன் உத்தரவுக்கேற்ப தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் குட்காவுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்தார். இந்த உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 20 மாநிலங்கள் குட்காவுக்கு தடை விதித்துள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய சுகாதாரத் துறை அமைச்சராக யு.டி.காதர் கடந்த 18-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடகாவிலும் குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்றார். கடந்த பாஜ அரசு கொட்டை பாக்கு விவசாயிகளின் நெருக்கடிக்கு பணிந்து குட்கா தடையை தள்ளிப் போட்டு வந்ததாக குற்றம் சாட்டினர். உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று குட்கா தடை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment