மின்னல் வேகத்தில் தப்ப முயன்றபோது 3 லாரிகள் கவிழ்ந்தன
திருநெல்வேலி வெள்ளக்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் கவிழ்ந்த மணல் லாரிகள்.
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கொண்டுசெல்லப்பட்ட 4 லாரிகளை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
போலீஸாரை பார்த்ததும், லாரி டிரைவர்கள் வேகமாக ஓட்ட முயன்றதால் 3 லாரிகள் கவிழ்ந்தன. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தாமிரவருணி ஆற்றில் மணல் அள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சட்டவிரோதமாக மணல் திருட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு வெள்ளக்கோவில் அருகே தாமிரவருணி ஆற்றில் சிலர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் கிடைத்தது.
பாளையங்கோட்டை ஆய்வாளர் பிரான்சிஸ் தலைமையில் போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஆற்றிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் வெளியே வந்தன. போலீஸாரை கண்டதும் லாரிகளின் டிரைவர்கள் லாரிகளை வேகமாக ஓட்டி தப்ப முயன்றனர். போலீஸார் அந்த லாரிகளை விரட்டிச் சென்றனர். இதனால், காட்டுப் பகுதியில் தாறுமாறாகச் சென்ற 3 லாரிகள் கவிழ்ந்தன. அந்த லாரிகளின் டிரைவர்கள், கிளீனர்கள் தப்பியோடினர். கவிழ்ந்த லாரிகளை மீட்ட போலீஸார், மற்றொரு லாரியை விரட்டிப் பிடித்தனர்.
இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, மேல பாலாமடை அம்மன்கோவில் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் மணிகண்டன் (24), திருமலைகொழுந்துபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் உதயகுமார் (25), குறுக்குத்துறையைச் சேர்ந்த சிவன் மகன் ஆறுமுகம் (20), மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த பண்டாரம் மகன் ராஜகுமார் (17) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்களில் மணிகண்டன், உதயகுமார், ஆறுமுகம் ஆகிய மூவரும் லாரி டிரைவர்கள். ராஜகுமார் கிளீனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment