மான் வேட்டையாடிய "மாஜி' டி.எஸ்.பி., கைது * 5 புள்ளி மான்கள் பறிமுதல்
திருவண்ணாமலை; மான் வேட்டையாடி, முக்கிய பிரமுகர்களுக்கு கறி வினியோகம் செய்து வந்த, ஓய்வு பெற்ற போலீஸ், டி.எஸ்.பி., உட்பட, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேட்டையாடிய, ஐந்து புள்ளி மான்களையும், வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை - சேலம் சாலையில் உள்ள, மேல் செங்கம் சோதனை சாவடியில், நேற்று அதிகாலை, மாவட்ட வன உதவி அலுவலர் மனோகரன் தலைமையில், வனத் துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தண்டராம்பட்டு பகுதியிலிருந்து, சேலம் நோக்கி வந்த, "இண்டிகா' காரை மடக்கி, சோதனை செய்தனர். அதில், வேட்டையாடப்பட்ட ஐந்து மான்கள் இருந்தன.
இதையடுத்து, காரில் வந்த, நான்கு பேரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சேலத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., வீரமணி, 60, மற்றும் மகேந்திரன், 32, பிரபாகரன், 25, மோகன், 23, என்பது தெரிந்தது. ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., வீரமணி, 1980ல், தண்டராம்பட்டு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துள்ளார். அப்போது, அங்குள்ள காட்டு பகுதியில் உள்ள மான்களை வேட்டையாடி, முக்கிய பிரமுகர்களுக்கு வினியோகம் செய்துள்ளார்.
பின், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சேலத்தில் பணிபுரிந்த போதும், பணி ஓய்வு பெற்ற பிறகும், ஆட்களை வைத்து, காட்டுப்பகுதியில், மான்களை வேட்டையாடி, முக்கிய பிரமுகர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். அதே போல், நேற்று முன்தினம் இரவு, மூங்கில் துறைப்பட்டு காட்டுப்பகுதியில், ஐந்து மானை வேட்டையாடி, காரில் எடுத்து வந்த போது, வனத்துறையினரிடம் சிக்கினார்.
வனத்துறையினர், நான்கு பேரை கைது செய்து, அவர்கள் வேட்டையாடிய, ஐந்து மானையும் பறிமுதல் செய்தனர். நால்வரும், செங்கம் மாஜிஸ்திரேட் மைதிலி முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment