கர்நாடக சட்டசபை தேர்தல்
பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது : நாளை மறுநாள் வாக்கு பதிவு
பெங்களூர்: கர்நாடகத்தில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் 5ம் தேதி நடக்கிறது. ஆளுங்கட்சியான பாஜ, காங்கிரஸ், மஜத, எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா, பிஎஸ் ஆர் காங்கிரஸ் (ஸ்ரீராமுலு) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகளும் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. பாஜ தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி முக்கிய நகரங்களில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.மஜத தலைவர் தேவகவுடா, கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பா ஆகியோரும் வாக்கு சேகரித்தனர். டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், மத்திய அமைச்சர் கபில்சிபில் ஆகியோர் இன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கின்றனர்.
கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. நாளை மறுநாள் காலை 7மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. 224 தொகுதிகளில் 2,948 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 52,140 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் ரகசிய கேமரா வைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது.
தமிழில் பிரசாரம் நடிகைக்கு எதிர்ப்பு
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என்று பெயரை மாற்றியுள்ள இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர். பெங்களூர் சாந்திநகர் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடத்துக்கு சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தமிழில் பேசி ஓட்டு கேட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு தலைவர் நாராயண கவுடா கூறினார்.
தங்களின் வருகைக்கு நன்றி
No comments:
Post a Comment