Search This Blog

Thursday, 23 May 2013

80 வயதில் எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிய ஜப்பானியர் !

80 வயதில் எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிய ஜப்பானியர் !




              80 வயதான மியூரா-- எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுமுன்னர் எடுக்கப்பட்ட படம்
   
                     ஜப்பானைச் சேர்ந்த 80 வயது முதிய மலையேறுபவர் உலகின் மிக உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி,இந்த சிகரத்தின் மீது ஏறிய மிகவும் வயது முதிர்ந்த நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
யூயிஷிரோ மியுரா என்ற இவர் , தனது 70வது வயதிலும், பின்னர் 75வது வயதிலும்,எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியிருக்கிறார்.
இப்போது வியாழக்கிழமை அதிகாலை அவர் மீண்டும் இந்த சிகரத்தின் மீது ஏறினார் என்று அவருக்கு உதவி செய்த குழு கூறியது.
2008ம் ஆண்டில் , தனது 76வது வயதில் எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய நேபாளத்தைச் சேர்ந்த மின் பகதூர் ஷெர்ச்சானின் சாதனையை, இந்த ஜப்பானியர் இப்போது முறியடித்துள்ளார்.
ஆனால் தற்போது 81 வயதாகும் ஷெர்ச்சான் விடுவதாக இல்லை. அவர் அடுத்த வாரம் இதே சிகரத்தின் மீது மீண்டும் ஏறப்போகிறார்
மியுரா இந்த 29035 அடி ( 8,850 மீட்டர்) உயரமுள்ள சிகரத்தை எட்டும் தனது இறுதிக்கட்ட பயணத்தை வியாழன்ன்று அதிகாலை 2 மணிக்குத் தொடங்கினார் . ஏழு மணிநேரங்களுக்குப் பின்னர் அவர் சிகரத்தை எட்டினார் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறின.
மியூரா தனது மகன் உட்பட வேறு மூன்று ஜப்பானிய மலையேறிகளுடன் இந்த சிகரத்தின் மீது ஏறினார். அவர்களுடன் ஆறு நேபாளிய ஷெர்பாக்களும் சென்றனர் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

உடல் நலப் பாதிப்பிலும் மலையேறும் மனோதிடம்

ஆபத்தான பனிச்சறுக்கு விளையாட்டில், மிகவும் அதி வேகமாக பனிச்சறுக்கு செய்தவர் என்ற உலக சாதனையை ஒரு முறை பெற்றிருந்த மியூராவுக்கு, 2009ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் இடது தொடை மற்றும் இடுப்பெலும்பு முறிந்தது.
இது தவிர அவருக்கு பல முறை இதய அறுவை சிகிச்சைகள் வேறு நடந்திருக்கின்றன.
இந்த மலையேறும் முயற்சியை தொடங்கும் முன்னதாக, அவர், எவெரெஸ்ட் சிகரத்தை எட்டுவதுதான் தன்னுடைய உடல் மற்றும் மனோ பலத்தின் வரையறைகளுக்கு சவால் விடுவதாகும், மேலும் இயற்கை அன்னையை கௌரவிப்பதுமாகும் என்று கூறியிருந்தார்.
“ நான் வெற்றியடைந்துவிட்டேன் “ என்று அவர் எவெரெஸ்ட் உச்சியிலிருந்து தனது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் , செய்கோள் தொலைபேசி மூலமாகப் பேசுகையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment