Search This Blog

Friday, 24 May 2013

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டம்

 

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டம்



புதுடில்லி: காவிரி விவகாரத்தில்,சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இடைக்கால கண்காணிப்புக்குழுவை , மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ளது.

இறுதித்தீர்ப்பு: தமிழகம் - கர்நாடகா இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி, ஆறு ஆண்டுகளாகி விட்டது. பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு பின், தமிழக அரசின் இடைவிடாத மேல்முறையீடுகள் காரணமாக, சுப்ரீம் கோர்ட் தலையிட்டதால், கடந்த பிப்ரவரி, 19ம் தேதி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இறுதி தீர்ப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டது, தமிழக அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இதன்மூலம், இறுதி தீர்ப்பில் உள்ள, தமிழகத்துக்கான தண்ணீர் பங்கீட்டிற்கு, சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைத்துள்ளது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல.தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் எனில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குபடுத்தும் குழு என்ற, இரண்டு அமைப்புகள் தேவை. இந்த இரண்டையும் அமைக்க வேண்டும் என்பது, அரசிதழிலும் உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பொறுப்பு, மத்திய அரசை சார்ந்தது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட்டவுடன், சூட்டோடு சூடாக, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை

சுப்ரீம் கோர்ட் உத்தரவு: இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டை, மீண்டும் தமிழக அரசு நாடியது. அந்த வழக்கு, கடந்த, 10ம் தேதி, நீதிபதி லோதா தலைமையிலான, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, தற்காலிக கண்காணிப்புக்குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. மேலும், இந்த தற்காலிக கண்காணிப்புக் குழுவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள் இடம் பெறுவார்கள். கண்காணிப்புக்குழுவுக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமை ஏற்பார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக கண்காணிப்புக்குழு செயல்படும் .வாரியம் அமைக்கப்படும் வரை காவிரியில் நீர் திறப்பது பற்றி தற்காலிக குழு முடிவு செய்யும். அதன் முடிவுகளில் மாநிலங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் சுப்ரீம் கோர்ட்டைஅணுகலாம் என உத்தரவிட்டனர்.

முதல்வர் கடிதம்: இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த மே 17ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் நீதிக்காக பல லட்சம் விவசாயிகள் இன்னும் காத்திருக்க முடியாது. காவிரி நடுவர் மன்ற உத்தரவை மத்திய அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.காவிரி மேலாண்வாரியம் அமைப்பதே தமிழக விவசாயிகளின் வேதனை தீர வழி. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகளுக்கு பிறகே அரசிதழில் வெளியிடப்பட்டது. பாசன ஆண்டு நெருங்குவதால் உடனே இரு குழுக்களையும் அமைக்க வேண்டும். பிப் 19ல் அரசிதழில் தீர்ப்பு வெளியான பின்பும் இரு குழுக்களும் அமைக்கப்படவில்லை. தற்காலிக குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது இடைக்கால தீர்வு தான். காவிரி மேலாண் வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைவது தான் நிரந்தர தீர்வாக அமையும். ஏற்கனவே இரு முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை என கூறியுள்ளார்.

தற்காலிக கண்காணிப்பு குழு அமைப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் முதல்வர் கடிதத்தை தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மத்திய நீர்வள ஆதாரத்துறை செயலர் தலைமையில் தற்காலிக கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான இந்த குழுவில், தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச்செயலாளர்கள் இடம் பெறுவார்கள். மத்திய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக கண்காணிப்புக்குழு செயல்படும். மேலும் இந்த குழு நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும். இந்த தற்காலிக குழு டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த குழுவின் முதல் கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும்.

No comments:

Post a Comment