Search This Blog

Friday, 31 May 2013

பி.சி.சி.ஐ.,யை மத்திய அரசு ஏற்குமா? ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு


பி.சி.சி.ஐ.,யை மத்திய அரசு ஏற்குமா? ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

 
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை, மத்திய அரசே ஏற்று நடத்தும் வகையில், உத்தரவிட கோரி டில்லி ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அமைச்சர் உத்தரவு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட சர்ச்சை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, பெரும் சிக்கலை கொடுத்து வருகிறது. "பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்' என, மத்திய விளையாட்டு துறை அமைச்சர், ஜிதேந்திரா கூறினார். இதே கருத்தை, மேலும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஐ.பி.எல்., உட்பட, கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களையும், மத்திய அரசே ஏற்க வேண்டும்; இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' எனக் கோரி, பொதுநல மனு ஒன்று, டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனம் இந்த மனுவை, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், குல்தீப் சிங் போகல் தாக்கல் செய்துள்ளார். மனுவில், அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை, மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்று, தேசிய விளையாட்டு பெடரேஷனாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். சூதாட்டம் மற்றும், "மேட்ச் பிக்சிங்' உட்பட, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும், அதில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மறறும் பிரபல விளையாட்டு வீரர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்து விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். சூதாட்டம், "ஸ்பாட்-பிக்சிங்'கில் ஈடுபடும் வீரர்களுக்கு எதிரான வழக்குகளை, விரைந்து விசாரிக்கும் வகையில், விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்.

ஐ.பி.எல்., போட்டியானது, மாபியா கும்பல்கள், விரைவாகவும், நேர்த்தியாகவும், பெருமளவில் பணம் சம்பாதிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தின் போதும், யுத்திகளை வகுக்க என அளிக்கப்படும், இரண்டு நிமிட நேரத்தை, வீரர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். ஏமாற்றுகின்றனர் இதில் தான், புக்கிகளும், வீரர்களும், தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். போட்டியின் முடிவையே மாற்றி, தேசத்தையே ஏமாற்றுகின்றனர்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இம்மனு, டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.முருகேசன் மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையிலான, "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரிடம் நீதிபதிகள், இதே போன்ற மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுவதால், மனுவில் திருத்தம் செய்யும்படி உத்தரவிட்டனர். இந்த மனு தொடர்பாக, பதில் அளிக்கும்படி, மத்திய அரசு, டில்லி மாநில அரசு, மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, ஆகஸ்ட், 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment