கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்தவருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான
கருணாநிதியின் பேரன் எனவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனவும் கூறி வங்கிகள்,
அமைச்சர்களின் மகன்கள் உட்பட பலரிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த நபரை
போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மோசடியில் அவருக்கு துணையாக இருந்த
நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நிதி மோசடி :
பாலாஜி என்ற சேகர் ரெட்டி, தன்னை கருணாநிதியின் பேரன் பலரிடமும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். சென்னையில் வசிக்கும் இவர் மேலும் பலரிடம் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சொகுசு கார்களில் வலம் வந்து கொண்டுள்ளார். இவரது தோரணை, வசதியான பின்னணியை கண்டு, அவற்றை உண்மை என நம்பிய முதலீட்டாளர்கள் பலர், பாலாஜியின் தொழில்கள் பலவற்றில் ஏராளமான தொகையை முதலீடு செய்துள்ளனர். பாலாஜி, இதனை பயன்படுத்தி ரூ.19 கோடி வரை வங்கியில் கடன் பெற்று, பின் மொத்த பணத்துடன் தலைமறைவாகி உள்ளார். இவர் லீனா மரியா பால்(25) என்ற நடிகை ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மெட்ராஸ் காஃபே, கோப்ரா, ரெட் சில்லிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
முக்கிய புள்ளிகளுடன் நெருக்கம் :
பாலாஜி என்ற இந்த நபர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவின் நெருங்கிய நண்பர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பெங்களூருவில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக நில மோசடி செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, கருணாகர ரெட்டி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் மகன்களுடன் பாலாஜிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
குற்றவாளிகள் கைது : ரேன்ஞ் ரோவர், ஆடி ஏ4,ரோல்ஸ் ரோய்ஸ் பான்டம், பி.எம்.டபிள்யூ 530 டி உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்களில் வலம் வந்து பலரையும் இவர்கள் ஏமாற்றி உள்ளனர். ஏமாந்தவர்களில் ஒருவர் அளித்த தகவலின்படி போலீசார் இவர்களை கண்டுபிடித்துள்ளனர். போலீஸ் தன்னை நெருங்குவதை அறிந்த பாலாஜி தப்பி ஓடி விட்டார். ஆனால் மரியாபால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றவியல் பிரிவு போலீசார், சென்னை போலீசார் மற்றும் டில்லி போலீசார் ஆகியோர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் மரியா பால், அரசு கான்ட்ராக்ட்கள் வாங்கி தருவதாகவும், அதற்கான ஆர்டர்கள் வாங்கித் தருவதாகவும் பலரிடம் ரூ.76 லட்சம் வரை நிதி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
போலீஸ் தகவல் :
பாலாஜி மற்றும் மரியா பாலால் ஏமாற்றப்பட்ட டில்லியைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின் பேரில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் கார் நம்பர்கள் மற்றும் குற்றவியல் பிரிவு தகவல்கள் மூலம் அவர்களின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எனவும், இவர்கள் இருவரும் சென்னையில் நடைபெற்ற மிகப் பெரிய 2 நிதி மோசடிகளில் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தான் இவர்கள் டில்லி வந்ததாகவும், 20 நாட்கள் முன் தான் தங்களின் இருப்பிடத்தை ஃபேட்க்பூர் பெரி பண்ணை வீட்டிற்கு மாற்றி உள்ளனர். இந்த வீட்டிற்கு மாத வாடகையாக இவர்கள் ரூ.4 லட்சம் செலுத்தி உள்ளனர். பாலாஜி, சென்னையில் உள்ள கனரா வங்கியில் ரூ.19 கோடி வரை கடன் பெற்றுள்ளார் எனவம் பின் அதனை திருப்பி செலுத்தாமல் பணத்துடன் அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாலாஜி மற்றும் மரியா பால் தங்கி இருந்த வீட்டில் இருந்து ஏராளமான சொகுசு கார்கள், 81 விலைஉயர்ந்த வாட்ச்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சொகுசு கார்கள் அனைத்தும் அவர்கள் வாங்கியதா அல்லது திருடப்பட்ட கார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment