மும்பை சாலைகளில் பிரீமியர் பத்மினி கார்: ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு காண முடியாது
விற்பனை நிறுத்தம் : அந்த மாநகரில் இயக்கப்படும் வாடகை கார்களில் பெரும்பான்மையானவை, பிரீமியர் பத்மினி கார்கள் தான். அந்த கார்களின் உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆன நிலையில், மும்பையில் மட்டும் அந்தக் கார்கள் இன்னமும், டாக்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகள் ஓடி களைத்து விட்ட அந்தக் கார்களை மாற்றுமாறு, வாடகை கார் ஓட்டுனர்களுக்கு, மும்பை போக்குவரத்துத் துறை பல முறை எச்சரிக்கை விடுத்தும், அந்தக் காரை விட்டு பிரிய மனமில்லாமல், ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். உரிமம் ரத்தாகும் : இதையடுத்து, வரும் ஜூலை, 31ம் தேதியுடன், பிரீமியர் பத்மினி கார்களை கைகழுவ வேண்டும்; இல்லையேல், டாக்சி உரிமம் ரத்தாகும் என, இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆகஸ்ட், 1ம் தேதி முதல், மும்பை சாலைகளில், பிரீமியர் பத்மினி கார்களை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரீமியர் பத்மினி காரை, டாக்சியாக ஓட்டி வரும் ஒருவர் கூறும் போது, "இப்போது வரும் கார்களின் பாகங்கள் பெரும்பாலானவை, பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. பிரீமியர் பத்மினி முழுவதும் உலோகத்தால் ஆன, ஸ்ட்ராங்கான வண்டி; செலவும் அதிகம் பிடிக்காது; ஓட்டுவதற்கும் எளிதானது. இந்த அருமையான காரை கைகழுவச்சொல்கின்றனர்; மனம் ஏற்க மறுக்கிறது' என்றார்.
No comments:
Post a Comment