மத்திய நிபுணர் குழுவின் ஆய்வு இன்று முதல் தொடக்கம்
ஆய்வுக்குப் பின்னர் தமிழக அரசுடன் ஆலோசிக்க மத்திய நிபுணர் குழு முடிவு
சென்னை: தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய நிபுணர் குழுவினர் இன்று முதல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் வறட்சி பாதித்த மாவட்டங்களை மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் அடங்கிய நிபுணர் குழுவினர் இன்று முதல் ஆய்வை தொடங்குகின்றனர். இரண்டு குழுக்களாக பிரிந்து 3 நாட்கள் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறியும் நிபுணர் குழுவினர் பின்னர் தமிழக அரசு அதிகாரிகளிடம் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள வறட்சி நிலவரம் மற்றும் தமிழக அரசின் நிவாரண கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் நிபுணர் குழுவினர் அறிக்கை அளிக்க உள்ளனர். தமிழகத்தில் சென்னை தவிர 31 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு நிபுணர் குழுவை நியமித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இந்த குழு அளிக்கும் ஆய்வு அறிக்கை பொறுத்தே தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய நிபுணர் குழுவினரிடம் விவரம் தெரிவிக்க எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment