49 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 49 தமிழக மீனவர்களை விடுவிக்க அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லியிலுள்ள இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 24 மீனவர்கள் புதன்கிழமை 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்களை சட்ட விரோதமான முறையில் பிடித்து மன்னார் என்ற இடத்தில் தங்களது பிடியில் இலங்கை கடற்படையினர் வைத்துள்ளனர்.
இதேபோல் வியாழக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் 25 பேர் 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து ஊர்காவல்துறை என்ற இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துரத்திச்சென்று விரட்டியடித்துள்ளனர். அந்த மீனவர்கள் தமிழக கடற்பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் அக்கறையின்மை: இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் அப்பாவித் தமிழக மீனவர்களின் நிலைமை குறித்து தங்களுக்கு தொடர்ந்து கடிதங்களை வேதனையுடன் எழுதி வருகிறேன். இந்தப் பிரச்னையில் மத்திய அரசின் செயலற்றதன்மை மற்றும் அக்கறையின்மை காரணமாக இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்தத் தாக்குதல் மற்றும் அத்துமீறிய செயல்களின் விளைவாக தமிழக மீனவர்கள் தங்களுடைய பாரம்பரியமிக்க பகுதிகளில் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவ சமுதாய மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.
அப்பாவித் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்படும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்காக தூதரக ரீதியில் எந்தவித நெருக்கடியையோ, அழுத்தத்தையோ மத்திய அரசு தரவில்லை.
தில்லி தூதரை அழையுங்கள்: பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி அவர்களை சட்ட விரோதமாக கடத்தி கொடூரச் செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வரும் சூழலில், தில்லியில் உள்ள அந்த நாட்டின் தூதரை அழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
மேலும், இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள 49 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில், அங்குள்ள நமது நாட்டின் தூதரகத்தை தொடர்பு கொண்டு உரிய வழிகாட்டுதல்களை தாங்கள் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment