Search This Blog

Thursday, 6 June 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மதிப்பெண்களிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- திருச்சி மாவட்டத்தில் புதிதாக காகித அட்டை தொழிற்சாலை அமைக்கப்போவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. ஆனால் அதன் காரணமாக காவிரி நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?.

பதில்:-30-5-2013 தேதிய காலை பத்திரிகை ஒன்றில், 'திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் அமையவுள்ள காகித அட்டை தொழிற்சாலையால் காவிரி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 600 டன் காகித அட்டை தயாரிக்கப்படவுள்ளது.

இதற்கு 1,200 டன் மூலப்பொருள்கள் தேவை. இந்த மூலப் பொருள்களை தொழிற்சாலைக்கு கொண்டுவர ஏராளமான லாரிகள் பயன்படுத்தப்படும். இது அப்பகுதியில் சுற்றுச்சூழலை கடுமையாகப் பாதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது.

மணப்பாறை அருகே தற்போது அமைய உள்ள காகித அட்டை ஆலையால் காவிரி ஆறும் மாசுபடும். அதிக ஆபத்து நிறைந்ததாக கருதப்படும் காகித அட்டை ஆலை தமிழகத்துக்கு தேவையில்லை' என்று செய்தி வந்துள்ளது.

கேள்வி:-ஆகஸ்ட் மாதம் 17, 18-ந்தேதிகளில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதே?.

பதில்:-மூன்றாவது முறையாக இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து வினியோகிக்க போவதாகவும் தெரிகிறது.

அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின்படியான விதியாகும்.

அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை 2 முறை தேர்வு வாரியம் நடத்தியது.

முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்த தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17-ந்தேதியன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18-ந் தேதியன்றும் நடக்கவுள்ளன.

தகுதி தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவீதம்.

இரண்டு முறை ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

தேர்ச்சி பெற அனைத்து பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரை போலவே 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும்.
தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் - அசாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவீதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதியினருக்கு 60 சதவீதம், மற்றவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்து பிரிவினருக்கும் 60 சதவீத மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமானதுமாகும். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறையாவது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன்வரவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

No comments:

Post a Comment