Search This Blog

Monday, 10 June 2013

சூடுபிடிக்கிறது மாநிலங்களவை தேர்தல் : 5 வேட்பாளர்கள் அதிமுக அறிவிப்பு

சூடுபிடிக்கிறது மாநிலங்களவை தேர்தல் : 5 வேட்பாளர்கள் அதிமுக அறிவிப்பு





             சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை தொடங்கிய நிலையில், 5 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சுயேச்சையாக போட்டியிடும் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாநிலங்களவை எம்.பி.க்களாக அதிமுக சார்பில் இளவரசன், மைத்ரேயன், திமுகவை சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஞானதேசிகன், கம்யூனிஸ்ட் டி.ராஜா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி மாநிலங்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த 4ம் தேதி அறிவித்தது. மாநிலங்களவை தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனும், உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை இணை செயலாளர் பாலசுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு 4 சீட்கள் உறுதியாக கிடைக்கும். ஒரு சீட்டை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக விட்டுக் கொடுக்குமா? அல்லது கம்யூனிஸ்ட்களின் ஆதரவுடன் 5வது வேட்பாளரையும் அதிமுக அறிவிக்குமா? என்ற குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், 5 அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக கட்சி தலைமை இன்று வெளியிட்டுள்ளது. தற்போதைய எம்.பி. மைத்ரேயன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அர்ஜுனன் (நீலகிரி), ரத்தினவேல் (திருச்சி புறநகர்), டாக்டர் ஆர்.லட்சுமணன் (விழுப்புரம் வடக்கு), மாணவர் அணி செயலாளர் சரவணபெருமாள் ஆகியோர் போட்டியிடுவதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு எம்பி சீட்டை கேட்டுப் பெறுவதற்காக அதிமுகவிடம் தீவிர பேச்சு நடத்தியதாக கூறப்பட்டு வரும் நிலையில், 5 வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மீதம் உள்ள ஒரு எம்பி பதவிக்கு திமுக அல்லது தேமுதிக, ஒரு வேட்பாளரை நிறுத்த வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் இருவரும் சேர்ந்து ஒருவரை அறிவித்தால், அவர் வெற்றி பெறுவார். யாராவது ஒருவர் போட்டியிட்டு மற்றொரு கட்சி தேர்தல் புறக்கணிப்பு செய்தால், அதிமுக 6வது சீட்டுக்கும் வேட்பாளரை நிறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 17. மனுக்கள் 18ம் தேதி பரிசீலிக்கப்படும். வாபஸ் பெற 20ம் தேதி கடைசி நாள். 15ம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறை என்றபோதிலும், மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடத்தப்படும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். வேட்பாளர் பற்றிய அறிவிப்பை அதிமுக வெளியிட்டதை தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தல் சூடுபிடித்துள்ளது.

ஒரு சீட்டுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து மற்ற கட்சிகளில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதனால், பிரதான கட்சிகள் சார்பில் யாரும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எம்.பி., எம்எல்ஏ தேர்தல் தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்யும் ‘தேர்தல் மன்னன்’ கே.பத்மராஜன் (55) மட்டும் இன்று சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். தலைமை செயலக வளாகத்தில் தமிழக மாநிலங்களவை தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் இன்று மதியம் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்
.

No comments:

Post a Comment