மோடிக்கு முக்கிய பதவி அளித்ததை எதிர்த்து
அத்வானி திடீர் ராஜினாமா
புதுடெல்லி: நரேந்திர மோடிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அத்வானி நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டுகோளையும் அவர் நிராகரித்தார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலை சந்திக்க பா.ஜ. தயாராகி வந்த நிலையில் கட்சியில் கோஷ்டிபூசல் வெடித்துள்ளது. குஜராத்தில் தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் தேர்தலை சந்திக்க பா.ஜ.வில் குரல்கள் வலுத்து வருகிறது. குஜராத்தில் சமீபத்தில் 6 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 6ம் பா.ஜ.வே கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து கட்சியில் மோடியின் நிலை வலுவடைந்தது. இந்நிலையில், கோவாவில் கடந்த 8, 9 தேதிகளில் பா.ஜ.வின் தேசிய செயற்குழு கூடியது. இதில் பா.ஜ.வின் தேர்தல் பிரசார குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். இதை அத்வானி விரும்பவில்லை. உடல் நிலையை காரணம் காட்டி செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தார். அத்வானியின் எதிர்ப்பையும் மீறி மோடிக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டது. இதனால், விரக்தியடைந்த அத்வானி நேற்று திடீரென கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தார். கட்சியின் போக்கு சரியில்லாததால் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் அத்வானி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்து ஜனசங்கத்தில் பணியாற்றி, பின்னர் ஜனதா கட்சியில் இருந்து பா.ஜ. பிரிந்தபோது அதை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான அத்வானி, கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். பா.ஜ. ஆட்சியில் துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார். மூத்த தலைவரான அத்வானியின் திடீர் ராஜினாமா அக்கட்சியினரிடம் பரபரப்பையும் அதிர்ச்சியையயும் ஏற்படுத்தியுள்ளது. மோடியை தவிர்த்தார்: தனது உதவியாளர் மூலம் நேற்று காலை 11 மணிக்கு ராஜ்நாத் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அத்வானி அனுப்பினார். பின்னர், 12.30 மணியளவில் அத்வானியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானியை அவர் கோரியதாக தெரிகிறது. ஆனால், மோடிக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு அத்வானி தனது எதிர்ப்பை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, மோடியும் ராஜ்நாத் சிங்கும் அத்வானியை சந்தித்து மோடியின் நியமனத்துக்கு ஆசி பெற முடிவு செய்ததாகவும் ஆனால், மோடியை தவிர்த்து ராஜ்நாத் சிங் மட்டுமே வந்தால் போதும் என்று அத்வானி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், எஸ்.எஸ்.அலுவாலியா, அனந்த் குமார், வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்கு சென்றனர். அத்வானியை சந்தித்து ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தனர். அத்வானியின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ராஜ்நாத் சிங் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ராஜினாமா முடிவை வாபஸ் பெற வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டுகோளை அத்வானி நிராகரித்தார். ஏமாற்ற மாட்டார்: அத்வானியை நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை வாபஸ் பெறும்படி கோரினார். இத்தகவலை டுவிட்டர் இணையதளத்தில் மோடி தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான தொண்டர் களை அத்வானி ஏமாற்ற மாட்டார் என்று மோடி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment