Search This Blog

Monday, 3 June 2013

அரசுப் பெண்கள் பள்ளியில் இனி ஆசிரியைகள் மட்டுமே நியமனம்: அரசு உத்தரவு

அரசுப் பெண்கள் பள்ளியில் இனி ஆசிரியைகள் மட்டுமே நியமனம்: அரசு உத்தரவு

பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் இனி அரசுப் பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இந்த உத்தரவை அனுப்பியுள்ளது.
அரசுப் பெண்கள் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் முதல் பாட ஆசிரியர்கள் வரை ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும். ஆண்கள் பள்ளியில் ஆண்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இருபாலர் பள்ளிகளில் ஆசிரியைகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் இதற்கு முன் சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டு வந்தனர். இத்தகைய ஆசிரியர்கள் இனி டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இப்போது இந்த உத்தரவால் பெண்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களுக்கோ, ஆண்கள் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களுக்கோ உடனடியாக எந்தவிதப் பாதிப்பும் இல்லை என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இனி வரும் ஆசிரியர் நியமனங்களின்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வுகளின்போதோதான் புதிய உத்தரவு அமல்செய்யப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments:

Post a Comment