Search This Blog

Sunday, 1 September 2013

தேர்தல் அறிவிப்புக்குப்பின் கூட்டணி முடிவு: விஜயகாந்த்

தேர்தல் அறிவிப்புக்குப்பின் கூட்டணி முடிவு: விஜயகாந்த்

சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின், 12வது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் வாசன் உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள மூப்பனாரின் நினைவிடத்திற்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு விஜயகாந்த் வந்தார். அவரை மத்திய அமைச்சர் வாசன், ஞானதேசிகன் ஆகியோர் மூப்பனாரின் நினைவிடத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அஞ்சலி செலுத்திய பின், விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், மூப்பனார் என் அரசியல் குரு. அதனால், அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தேன். லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி பார்க்கலாம் என்றார். சென்னை, தி.நகரில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் இருந்து, வெங்கட் தலைமையில் 1,500 இளைஞர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, ரமேஷ்குமார் தலைமையில் கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதியை, வாசன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் விடியல் சேகர், அமீர்கான், பாரத் நாச்சியப்பன், கருசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்ட தலைவர் மனோ ஏற்பாட்டில், 5,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இமயா கக்கன் தயாரித்த, தியாக தீபம் என்ற, சிடியை ஞானதேசிகன் வெளியிட்டார். மத்திய சென்னை மாவட்டத் துணை தலைவர் ஜவஹர்பாபு தலைமையில், இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் பிரமுகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பல்வேறு நலத்திட்ட உதவிகளை, வாசன் வழங்கினார். மூப்பனார் நினைவிடத்தில் காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் பிரின்ஸ், விஜயதாரணி உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்

No comments:

Post a Comment