மீண்டும் மிரட்டுமா ராஜஸ்தான்: இன்று பெர்த் அணியுடன் மோதல்
ஜெய்ப்பூர்:பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் "ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய ராஜஸ்தான் அணி காத்திருக்கிறது.
இந்தியாவில், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் "ஏ பிரிவு லீக் போட்டியில் டிராவிட் வழிநடத்தும் ராஜஸ்தான் அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா) அணியை எதிர் கொள்கிறது.
சாம்சன் அசத்தல்:ராஜஸ்தான் அணியை சொந்த மண்ணில்(ஜெய்ப்பூர்) அசைப்பது மிகவும் கடினம். இங்கு தொடர்ந்து 10 போட்டிகளில்(பிரிமியர் தொடரில் 8 + சாம்பியன்ஸ் லீக்கில் 2) வென்றுள்ளது. இந்த வெற்றிநடை இன்றும் தொடரலாம். கேப்டன் டிராவிட், ரகானே ஜோடி நல்ல அடித்தளம் அமைப்பது அவசியம். மும்பை அணிக்கு எதிராக அரை சதம் கடந்த சாம்சன் அதிரடி காட்ட வாய்ப்பு உள்ளது. இவருடன் கைகோர்க்க வாட்சன், பின்னி உள்ளனர். கடந்த போட்டியில் 26 பந்தில் 46 ரன்கள் விளாசிய "சீனியர் ஹாட்ஜ் இருப்பது பலம்.
நாயகன் டாம்பே:கடந்த போட்டியில், "சுழலில் அசத்திய "சீனியர் பிரவிண் டாம்பே,42, விக்கெட் வேட்டை நடத்த தயாராக உள்ளார். "வேகத்தில் கூப்பர், பால்க்னர் கைகொடுக்கும்பட்சத்தில், ராஜஸ்தான் அணி அரையிறுதியை உறுதி செய்யலாம்.
இறங்குமுகம்:பெர்த் அணி இறங்குமுகத்தில் உள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் வோல்ட்ஸ் அணியிடம் தோற்றது. முக்கிய வீரர்கள் இல்லாததால் தள்ளாடுகிறது. கடந்த போட்டியில் அரை சதம் அடித்த கார்ட்ரைட் இருப்பது ஆறுதல். அனுபவசாலியான கேப்டன் சைமன் காடிச் சோபிக்க வேண்டும். வோஜஸ் நம்பிக்கை தருகிறார்.
ஜோயல் மட்டும் தன் பங்களிப்பை தருகிறார். மற்ற பவுலர்கள் விக்கெட் வீழ்த்துவதை விட்டுவிட்டு, ரன்களை வாரி வழங்குகின்றனர். இதை குறைக்க வேண்டும்.
வெல்லுமா லயன்ஸ்
இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதுகின்றன. இதில், புள்ளிப்பட்டியிலில் இரண்டாவது இடத்திலுள்ள வோல்ட்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் சதம் விளாசிய புரூமின் பங்களிப்பு நிச்சயம் உண்டு. டெரக் டி பூர்டர், டஸ்காட்டே ரன் குவிப்பில் ஈடுபடலாம்.
லயன்ஸ் அணி தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ளது. இந்த அணியின் "டாப்-ஆர்டர் வீரர்கள் விரைவில் வெளியேறுவது பின்னடைவு. பந்துவீச்சில் தன்வீர், டிசாட் சொபே ஆறுதல் தருகின்றனர். அரையிறுதிக்கு முன்னேற இந்தப்போட்டி முக்கியமானது என்பதால், வோல்ட்ஸ் அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment