"பைலின்' புயலால் ஒடிசாவில் பயிர்கள் சேத மதிப்பு ரூ.2,400 கோடி: ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் பலத்த பாதிப்பு
கோபால்பூர்: ஒடிசாவை தாக்கிய, பைலின் புயல், அம்மாநிலத்தில் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவில் துவங்கி, நேற்று காலை வரை வீசிய, பயங்கர புயல் காற்றால், 2,400 கோடி மதிப்புள்ள பயிர்கள் அழிந்து நாசமாயின. ஒன்பது லட்சம் பேர், பல வித இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனினும், 200 கி.மீ., வேகத்திற்கு மேல் இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பைலின், கருணை கூர்ந்து, 100 கி.மீ., வேகத்தில் தாக்கியதால், ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் தப்பியுள்ளன.
வங்கக் கடலில், கடந்த சில நாட்களாக உருவாகியிருந்த, காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் தீவிரமாகி, புயலாக உருவெடுத்தது. பைலின் என, பெயர்சூட்டப்பட்ட அந்த பயங்கர புயல், சனிக்கிழமை இரவு, ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்கரைகளை தாக்கும் என, கணிக்கப்பட்டது.அடிக்கடி, புயலின் சீற்றத்திற்கு இலக்காகும் ஒடிசா மாநிலத்தில், 1999ல், வீசிய கோரப் புயலில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்ததால், பைலின் புயல், அம்மாநிலத்தின் பயங்கர பீதியை ஏற்படுத்தியிருந்தது. சனிக்கிழமை இரவு தான் தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்ததால், கடலோர மாவட்டங்களில், கடலுக்கு அருகில் குடியிருந்த மீனவர்கள் உட்பட, நான்கு லட்சம் பேர், கடந்த மூன்று நாட்களாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இரண்டு நாட்களாக, காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில், ஒடிசாவின் கடலோர பகுதியில் நீடித்ததால், பலத்த மழை பெய்தது. அதனுடன், பலத்த காற்றும் வீசியதால், மின் சப்ளை துண்டிக்கப்பட்டு, அவசர கால நிலைமை அமல்படுத்தப்பட்டிருந்தது.
எதிர்பார்த்த படியே, நேற்று முன்தினம் மாலை, பைலின் தன் தாக்குதலை துவக்கியது. அசுர வேகத்தில் வீசிய காற்றால், ஆயிரக்கணக்கான மரங்கள், வேறுடன் பெயர்த்து எறியப்பட்டன. மின் கம்பங்கள், மொபைல் கோபுரங்கள், காற்றில் தூசி போல அடித்துச் செல்லப்பட்டன. 200 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90100 கி.மீ.,
வேகத்தில் தான் காற்று வீசியது. அதுவும் மிகப் பயங்கரமான வேகம் தான்
என்பதால், கடலோர பகுதிகள் சின்னாபின்னமாயின. பத்துக்கும் மேற்பட்ட
மாவட்டங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த நெல், கோதுமை பயிர்கள், மழை
நீரில் மூழ்கின. வயல் வெளிகளில் வெள்ளம் பாய்ந்து, பயிர்கள் மொத்தமாக
அடித்து செல்லப்பட்டன. நேற்றைய முதற்கட்ட மதிப்பீட்டில், பைலின் புயலால், ஒடிசாவில் மட்டும்,
2,400 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் எக்டேர் விவசாய நிலத்தில்
பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது.மழை
மற்றும் வெள்ளம், புயல் காற்று, மரங்கள் விழுந்ததால் பாதிப்பு என,
ஒடிசாவின், 12 மாவட்டங்களில், 15 ஆயிரம் கிராமங்களில், ஒன்பது லட்சம் பேர்
பாதிக்கப்பட்டனர். புயலால் இறந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு தான் என்பது
ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது.
எனினும், மின்சாரம்
இல்லாதது, தகவல் தொடர்பு வசதிகள் துண்டிப்பு போன்ற பாதிப்பு, அப்பகுதி
மக்களை மிகுந்த அவதிக்கு உள்ளாக்கியது. பத்து மணிநேரத்திற்கும் மேலாக, பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியிருந்த பைலின், நேற்று காலை, 8:00 மணியளவில் பலவீனமடைந்து, ஒடிசா வான்வெளியை விட்டு வெளியேறி, வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து, மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அங்கேயே நிலை கொண்டது. பைலின் புயலின் கண் மையம் கொண்டிருந்த, ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில், பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. அங்கு இயல்பு நிலை திரும்ப, இன்னும் பல வாரங்கள் ஆகும் என, கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவில், மணிக்கு, 220 கி.மீ., வேகத்தில், இங்கு, காற்று வீசியதாக கூறப்பட்டுள்ளது.
அது போல், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில், ஸ்ரீகாகுளம் கடும் பாதிப்பை சந்தித்தது. அம்மாநிலத்தின், பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக, இட்சாபுரம் என்ற இடத்தில், 19.8 செ.மீ., மழை பெய்தது.பொதுவாக, ஆந்திராவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.அம்மாநிலத்தின் பல நகரங்களில், தேசிய
பேரிடர் மீட்புப் படையினர், தயார் நிலையில் இருந்தனர். சாலையில் சரிந்த
மரங்களை அப்புறப்படுத்தப்பட்டன. இரண்டு இடங்களில், வெள்ள நீரில்
சூழப்பட்டு, உயிரை காப்பாற்ற போராடிய, 110 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஒடிசாவிலிருந்து,
வடக்கு நோக்கி நகர்ந்த பைலின், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில்
பலத்த மழையை ஏற்படுத்தியது. பீகாரில், ஏற்கனவே, அனைத்து ஆறுகளும், கடந்த
சில மாதங்களாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், நேற்று முதல், பைலின்
புயலால் புதிய அபாயம் தொற்றிக் கொண்டதால், பீகாரின் பல மாவட்டங்களில், வெள்ள அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டது. பலத்த காற்றால், மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவின்
துறைமுகத்திற்கு வெளியே, ஆழ்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,
எம்.வி.பிங்கோ என்ற, இரும்புத்தாது சரக்கு கப்பல், கடலில் மூழ்கியது.
அதிலிருந்த,சீனர்கள், இந்தோனேசியவர்கள், படகு மூலம் உயிர் தப்பியுள்ளனர்.பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், சென்னைகோல்கட்டா வழித்தடத்தில், ஒடிசா பாதையில், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கணிப்புகள் பொய்யாயின: பைலின் புயலில் கோரத் தாக்குதல் வேகம், அதிகபட்சம், மணிக்கு, 200 கி.மீ.,க்கு மேல் இருக்கும் என, அமெரிக்காவின் கடற்படை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அது, சூப்பர் சூறாவளியாக இருக்கும்; பாதிப்பு மிக பயங்கரமாக இருக்கும் என, அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், எதிர்பார்த்த படி, காற்றின் வேகம், அவ்வளவு அதிகமாக இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. கொஞ்ச நேரம் மட்டும், 200 கி.மீ.,க்கு அதிகமாக, ஒடிசாவில் காற்று வீசியுள்ளது. பிற நேரங்களில், வழக்கமான புயல் காலத்தில் வீசும் அளவிலேயே காற்றின் வேகம் இருந்துள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை தலைவர், எல்.எஸ்.ரத்தோர் கூறும் போது, இத்தகைய சூழ்நிலையில், மக்களின் பீதியை அதிகரிக்கும் வகையில், எங்களால் அவ்வாறு கணிப்பை வெளியிட முடியாது. எங்களின் கணிப்பு, அதிகபட்சம், 100 கி.மீ., வேகம் தான். வெளிநாட்டு நிறுவனங்களின் கணிப்பு பொய்யாகிப் போனது, என்றார்.
No comments:
Post a Comment