Search This Blog

Wednesday, 30 October 2013

சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.250 உயர்த்த பரிந்துரை

சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.250 உயர்த்த பரிந்துரை

புதுடில்லி : பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும், கடுமையான நஷ்டத்தை தடுக்க வேண்டுமானால், சமையல், காஸ் விலையை, சிலிண்டருக்கு, 250 ரூபாய் அதிகரிக்க வேண்டும்; மானிய விலையில், வழங்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, ஆறாக குறைக்க வேண்டும் என்றும், கிரீத் பரீக் கமிட்டி, மத்திய
அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

குறைவான விலையில்:டீசல், சமையல் காஸ்,மண்ணெண்ணெய் ஆகியவற்றை, பொதுமக்களின் நலன் கருதி, சந்தை விலையை விட குறைவாக, மானிய விலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்ற, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக, மத்திய அரசு வினியோகித்து வருகிது.சமீப காலமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், எண்ணெய் நிறுவனங்களின் இறக்குமதி செலவு, பல மடங்கு அதிகரித்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவும், எண்ணெய் இறக்குமதி செலவை அதிகரித்து விட்டது.இதனால், டீசல், சமையல் காஸ் உள்ளிட்ட, எரிபொருட்களின் விலையை, கணி்சமாக அதிகரிக்க வேண்டும் என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சந்தை விலைக்கேற்ப:பெட்ரோல் விலையை, சந்தை விலைக்கேற்ப, மாற்றிக் கொள்வதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.அதே நேரத்தில், டீசல் உள்ளிட்ட, மற்றஎரிபொருட்களின் விலைகளையும், உயர்த்த வேண்டிய நெருக்கடி, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றை, மானியத்தில் விற்பனை செய்வதால், கடந்த ஏப்ரலில், 80,000 கோடி ரூபாயாக இருந்த, அரசின் மானியச் சுமை, 1.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது.இந்நிலையில், எரிபொருள் விலை குறித்து ஆய்வு செய்வதற்காக, பேராசிரியர், கிரீத் பரீக் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, இது தொடர்பான விரிவான பரிந்துரைகளை, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லியிடம், நேற்று அளித்துள்ளது.

ஆறு சிலிண்டர் தான்:அதில் கூறப்பட்டுள்ளதாவது:டீசல் விலையை, லிட்டருக்கு, 5 ரூபாய், உடனடியாக அதிகரிக்க வேண்டும். அதே போல், மானிய விலையில், தற்போது ஆண்டுக்கு, ஒன்பது,காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இதை, ஆறு சிலிண்டர்களாக குறைக்க வேண்டும். ஆறு சிலிண்டர்களுக்கு மேல் வாங்குவோருக்கு, சந்தை விலையில், அதை வழங்க வேண்டும்.சமையல் காஸ் விலையை, சிலிண்டருக்கு, 250 ரூபாய் உயர்த்த வேண்டும். மண்ணெண்ணெய் விலை, லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும். இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்யும் என்றும், விலை உயர்வு குறித்து, டில்லி உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்தபின், விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு வாய்ப்புள்ளது என்றும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment