Search This Blog

Friday, 11 October 2013

அடுத்தவர் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது சுலபமல்ல

அடுத்தவர் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது சுலபமல்ல

லஞ்சம், பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்புதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கான பணப் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. 'வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன், முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி, பல வங்கிகள், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன.

முதல் கட்டமாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,), அதன் வாடிக்கையாளராக இல்லாதவர்கள், வெளியூரில் உள்ள, அதன் வாடிக்கையாளருக்கு, பணம் செலுத்தும் போது, அந்த நபரின், விவரங்களை அறியும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்துவோர், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும், ஒரு அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன், வங்கியில் வழங்கப்படும், 'கிரீன் ரெமிட் கார்டு' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பின், வங்கியில் இருந்து, 'கிரீன் ரெமிட் கார்டு' என்ற கார்டு வழங்கப்படுகிறது. இதற்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கார்டு மூலம், ஒருவர் கணக்கில் மட்டுமே பணம் செலுத்த முடியும். ஒரு மாதத்திற்கு, ஒருவர் கணக்கில், அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இதற்காக, எஸ்.பி.ஐ., கிளைகளில், தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, வரவேற்பு காணப்பட்டாலும், பணம் செலுத்த வழங்கப்படும், 'கிரீன் ரெமிட் கார்டு'க்கு கட்டணம் வாங்காமல், இலவசமாக வழங்குவதுடன், பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மே மாதம், 'கிரீன் ரெமிட் கார்டு' திட்டம் அறிமுகம் செய்தாலும், தற்போது தான், முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், லஞ்ச பணத்தை தருவோரிடம், உறவினர் பெயரில், டிபாசிட் செய்ய சொல்கின்றனர். சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் போது, பணம் செலுத்திய நபரின் விவரங்களை, வங்கிகளிடம் கேட்கின்றனர். எனவே தான், வங்கி வாடிக்கையாளராக இல்லாதோர், வங்கி வாடிக்கையாளர் கணக்கில், பணம் செலுத்தும் போது, அடையாள ஆவணங்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம், முறைகேடான பண பரிமாற்றம் தடுக்கப்படும். துவக்கத்தில், கார்டு இலவசமாக வழங்கப்பட்டது. பலர், கார்டை வீட்டில் வைத்து விட்டு, தொலைந்து விட்டதாக, புதிய கார்டு கேட்கின்றனர். அதை குறைக்கவே, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment