Search This Blog

Tuesday, 29 October 2013

நண்பர்களுக்கு துரோகம் இழைத்த அமெரிக்கா? – சீலா – ஜெயந்தன்

நண்பர்களுக்கு துரோகம் இழைத்த அமெரிக்கா? – சீலா – ஜெயந்தன்

உலகின் மிகப் பலம்பொருந்திய நாடுகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்கா நட்பின் இலக்கணத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக பல மேற்கத்தையே நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

உலக அளவில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் அமெரிக்காவை ‘தொலைபேசி ஒட்டுக் கேட்டல்’ என்ற சர்ச்சை பெரிதும் உலுக்கியுள்ளது என்பதற்கு அப்பால் ராஜதந்திர உறவுகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

நேச நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்பில் இரகசியமாக அமெரிக்கா உளவு பார்த்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜெர்மன், ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, பிரேசில் போன்ற பல நாடுகளின் தலைவர்களையும் அமெரிக்கா இரகசியமாக கண்காணித்துள்ளது.

இந்த நடவடிக்கையை அநேகமான நேச நாடுகள் ஒர் துரோகச் செயலாகவே நோக்குகின்றன.

ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மொர்கலின் தொலைபேசி கடந்த ஒரு தசாப்த காலமாக ஒட்டுக் கேட்கப்பட்டு வருவதாக அண்மையில் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்களை அமெரிக்கா இதுவரையில் மறுக்கவோ மறைக்கோ முயற்சிக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் அமெரிக்கா நாடுகளின் உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதாகவும் மூக்கை நுழைப்பதாகவும் பல நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தினால் உளவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2007ம் ஆண்டு அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தினால் இந்த உளவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த உளவு நடவடிக்கைகளுக்கு பிரிஸ்ம் என பெயரிடப்பட்டுள்ளது.

நிறுவனம், தனிப்பட்ட நபருக்கான தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள், வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளத் தொடர்பாடல்கள் போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.

பயங்கரவாத இல்லதொழிப்பு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்காக வருடாந்தம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1978ம் ஆண்டு வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு சட்டத்தின் கீழ் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

முதலில் நீதிமன்றின் அனுமதியுடன் கண்காணிப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து நீதிமன்றின் அனுமதியின்றி உளவுத் தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

2005ம் மற்றும் 2008ம் ஆண்டுகளில் கண்காணிப்பு விவகாரம் குறித்த சட்டங்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

உளவுத் தகவல் கசிவு தொடர்பில் அமெரிக்க சீ.ஐ.ஏ உளவுப் பிரிவின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன், அம்பலப்படுத்தியிருந்தார்.

யாரின் தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன

அமெரிக்க பிரஜைகள், வெளிநாடுகளில் வாழும் அமெரிக்கப் பிரஜைகள், அமெரிக்காவில் வாழும் ஏனைய பிரஜைகள் போன்றவர்களின் தகவல்களை இவ்வாறு கண்காணிக்க முடியாது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வெளிநாட்டுப் பிரஜைகள் வெளிநாட்டு தொடர்பாடல்களே கூடுதலாக கண்காணிக்கப்படுகின்றது.

அமெரிக்கப் பிரஜைகள் கண்காணிக்கப்படவில்லை என்பதனை அமெரிக்க புலனாய்வுப் பிரவினர் எப்.பி.ஐ. உறுதிப்படுத்தியதன் பின்னரே உளவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

உலகின் ஏனைய நாட்டு பிரஜைகளின் தகவல்களை கண்காணிப்பதற்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
எவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது .

அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனம் விசேட கருவியொன்றின் மூலம் தகவல்களை கண்காணித்து உளவு பார்க்கின்றது.

கூகிள், யாகூ, பேஸ்புக், டுவிட்டர் போன்ற உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நேரடியாக தகவல்களை வழங்குவதில்லை.

கணனிகளின் ஊடாக இவ்வாறு இணையத் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பிரிஸ்ம் ஊடாக அமெரிக்க பாதுகாப்பு முகவர் நிறுவனம் நேரடியாகவே அதாவது ரியல் டைமில் தகவல்களை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மைக்ரோசொப்ட், எப்பிள், யாகூ, கூகிள் மற்றும் பேஸ் புக் போன்ற நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் நடைமுறையும் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

- யாருடைய தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன
- இந்தத் தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்கு பகிரப்படுகின்றனவா
- அதிகாரிகள் தங்களது தகுதியை மீறிச் செயற்படுதனை தடுக்க ஏதேனும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளனவா
ஆகிய கேள்விகளுக்கு அமெரிக்க அரசாங்கமோ பாதுகாப்பு துறையினரோ தெளிவான பதில்களை வழங்கத் தவறியுள்ளனர்.

அமெரிக்கா கண்காணிப்பு பணிகணை நியாயப்படுத்துகின்றது
தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் உளவுப் பணிகள் நியாயமானதே என அமெரிக்கா அறிவித்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பாரியளவில் வெற்றியளித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கீத் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 50 வீதமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள் றியயடிகக்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

’100 வீதமான பாதுகாப்பையோ, 100 வீதமான அந்தரங்கத்தையோ எதிர்பார்க்க முடியாது’ என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

உங்களது தகவல்கள் கண்காணிக்கப்படுவதனை எவ்வாறு தடுக்க முடியுமா?

- பிரபல்யமான தொழில்நுட்ப நிறுவனங்களின் உற்பத்திகளை பயன்படுத்தக் கூடாது
- க்ளவுட் ஸ்டோரேஜ் கருவியொன்றை பயன்படுத்தினால், அதற்கான சேர்வர் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும்
- இலக்ரோனிக் பொன்டியர் பவுண்டேசனின் எச்.ரீ.ரீ.பீ.எஸ் எக்ஸ்டென்சனைப் பயன்படுத்தவும்
- வேர்சுவல் பிரைவட் நெட்வர்க்கைப் பயன்படுத்தவும்

எவ்வாறெனினும் இவ்வாறான பாதுகாப்பு வழிமுறைகளை மீறியும் அமெரிக்கா கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தூதரகங்கள், உலகத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரதும் தகவல்களை அமெரிக்கா மிகவும் நுட்பமான முறையில் உளவு பார்த்துள்ளது.

தொலைபேசி ஒட்டுக் கேட்டல், இணைய தகவல் பரிமாற்ற கண்காணிப்பும், மின்னஞ்சல் தொடர்பாடல் கண்காணிப்பு என தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் அரசாங்கங்கள் என்ற பல்வேறு மட்டத்தினரதும் அந்தரங்க இரகசியத் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்தில் ஸ்பெய்னின் 60 மில்லியன் தொலைபேசி அழைப்புக்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எந்த இடத்திலிருந்து யார் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியது போன்ற தகவல்கள் திரட்டப்பட்ட போதிலும், தொலைபேசி உரையாடல் பற்றிய தகவல்கள் திரட்டப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

உலகின் மிகப் பலம்பொருந்திய கனவான்கள் வாழும் நாடாகவும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் நாடாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஐக்கிய அமெரிக்கா, இவ்வாறு தனி மனித சுதந்திரத்தில் பயங்கரவாதத் தடுப்பு என்ற போர்வையில் தேவையின்றி தலையீடு செய்வது உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு மிகவும் முக்கியமானது என்ற போதிலும் தனிமனித அந்தரங்க விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags: அமெரிக்கா, துரோகம், நண்பர்

No comments:

Post a Comment