மதுபானம் கொள்முதல் வழக்கு: டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: விற்பனை அடிப்படையில் மதுபானம் கொள்முதல் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுபானங்களை கொள்முதல் செய்யவும், விற்பனை அடிப்படையில் மதுபானங்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் மதுபான நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், திருவாரூர் மாவட்டம், கர்ணாவூர் கிராமத்தில் எங்களுடைய மதுபான தொழிற்சாலை உள்ளது. எங்களது நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை தயாரிக்க முறையான உரிமம் பெற்றுள்ளோம்.
எங்களது நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்களை, டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய உரிமம் உள்ளது. ஆனால், பிற மதுபான நிறுவனங்களிடம் இருந்து மாதத்துக்கு சுமார் 10 லட்சம் மதுபான பெட்டிகளை வாங்கும் டாஸ்மாக் நிறுவனம், எங்கள் நிறுவனத்திடம் இருந்து வெறும் 28 ஆயிரத்து 330 மதுபான பெட்டிகளை மட்டும் வாங்குகிறது.
மேலும், தனியார் நிறுவனத்திடம் இருந்து மதுபானங்கள் வாங்குவது குறித்தோ, அந்த மதுபானங்களுக்கு சில்லரை விலையை நிர்ணயம் செய்வது குறித்தோ தெளிவான விதிமுறைகள் டாஸ்மாக் நிறுவனத்திடம் இல்லை. மதுபானம் தயாரிப்பு செலவு விலையில் இருந்து எங்களிடம் மதுபானங்களை வாங்கி, அதற்கு 600 சதவீத விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதனால், எங்கள் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் தலைவர், ஆளும் கட்சிக்கு சாதகமானவர் என்பதால், தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானம் வாங்குவதில் பாரபட்சத்துடன் செயல்படுகிறார். இதனால், எங்களது நிறுவனமும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ளது. இந்த தேங்கி கிடக்கும் மதுபானங்களை கொள்முதல் செய்யவும், அறிவியல் மற்றும் வர்த்தக ரீதியான புள்ளி விவரங்களின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்யவும், அதன் சில்லரை விலையை நிர்ணயம் செய்யவும் டாஸ்மாக் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி டாஸ்மாக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment